இந்தியா அதிகாரப் பகிர்வை உறுதி செய்தால் சீனா காலூன்ற விடமாட்டோம்!

ஆசிரியர் - Editor IV
இந்தியா அதிகாரப் பகிர்வை உறுதி செய்தால் சீனா காலூன்ற விடமாட்டோம்!

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிட்டுவதை இந்தியா உறுதி செய்யுமானால், தமிழர் தாயகத்தில் சீனா உட்பட வேறு எந்த சக்தியும் காலூன்றாமல் தமிழர்கள் பார்த்துக் கொள்வர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சிச் சேவையின் "நேர்பட பேசு' என்ற விவாத அரங்கத்தில் 'இலங்கைத் தமிழர் பகுதிகளில் சீனத்தூதர்: இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?' என்ற தலைப்பில் நடைபெற்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்வில் கொழும்பில் இருந்து கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

சீனா இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் நிலை கொள்வதை நாங்கள் விரும்பவில்லை என்பதை எங்கள் கட்சி பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றது. அதன் பேச்சாளராக நானே இதனை நாடாளுமன்றத்திலும், வெளியிலும் உத்தியோகபூர்வமாக அறிவித்து இருக்கின்றேன்.

அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம் - நாங்கள், இலங்கைத் தமிழர்கள், எங்கள் அரசியல் உரிமைகளைக் கோருவது இரண்டு அடிப்படைகளில். ஒன்று - மனித உரிமைகள் அடிப்படையில். மற்றையது - ஜனநாயகத்தின் அடிப்படையில்.

சீனா இந்த இரண்டிலும் மிக மிகத் தரம் குறைந்த நாடாக இருக்கின்றது. ஆகவே, சீனாவின் செல்வாக்கு இலங்கையில் இருக்குமானால் அது எங்கள் நலனைப் பாதிக்கும். அடுத்த காரணம் - இலங்கை தென் சீனக் கடலில் ஒரு தீவாக இருந்திருக்குமானால் சீனாவினுடைய நியாயமான பாதுகாப்புக் கரிசனைகளை நாம் கவனத்தில் கொண்டிருப்போம்.

ஆனால், யதார்த்தம் அப்படி அல்ல. இலங்கை இந்துமா சமுத்திரத்தில், இந்தியாவில் இருந்து கூப்பிடு தொலைவு தூரத்தில் இருக்கின்றது. ஆகவே, இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளை நாம் கவனத்தில் கொள்வோமாக இருந்தால் சீனாவை நாம் வரவேற்க முடியாது.

சீனா இந்தியாவினுடைய நட்பு நாடும் அல்ல. அத்தகைய நாட்டை, இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள இலங்கையில், குறிப்பாகத் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கில் கால் ஊன்ற அனுமதிக்க முடியாது என்பதைத் தெட்டத் தெளிவாக நாம் கூறியிருக்கின்றோம்.

அதற்குப் பிறகுதான் சீனத் தூதுவர் வடக்கே பயணம் மேற்கொண்டிருக்கின்றார். ராமர் சேது பாலம் வரைப் படகில் பயணம் செய்திருக்கின்றார். இந்தியாவைச் சீண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றார்.

அண்மையில் நான் அமெரிக்கா சென்றிருந்தேன். அங்குள்ள உயர் அதிகாரிகளோடு பேசி இருக்கின்றேன். அவர்கள் நேரடியாக ஒரு கேள்வி கேட்டார்கள். நாங்கள் உங்களுக்கு அரசியல் தீர்வைப் பெறுவதற்கு உதவி செய்தால், அது இலங்கையிலிருந்து சீனர்களை வெளியேற்ற எப்படிப் பங்களிக்கும் என்று கேட்டனர். அவர்களுக்குக் கூறிய அதே பதிலைத்தான் கொழும்பிலுள்ள இந்திய இராஜதந்திரிகளுக்கும் கூறியிருக்கின்றேன்.

வழமையாக ஒரு நாடு இன்னொரு நாட்டின் பிரச்சினையில் தலையிட்டால், அந்தப் பிரச்சினையைத் தொடர்ந்தும் நீடித்து வைத்திருக்கவே விரும்பும். தீர்த்து வைக்க விரும்பாது. அந்தப் பிரச்சினை நீடித்தால்தான் தொடர்ந்தும் தலையீட்டையும் பேண முடியும், ஈடுபாட்டை வைத்திருக்க முடியும் என்ற எண்ணமே இருக்கும்.

ஆனால், இலங்கைத் தமிழர் விடயத்தில் அது மாறுபட்டது. எங்களுக்கு அதிகாரப் பகிர்வை ஒழுங்காகக் கிடைக்கச் செய்தால் வடக்கு, கிழக்கில் சீனர்கள் காலூன்றுவதை நாங்கள் தடுப்போம்.

காணி அதிகாரம், சட்டம் - ஒழுங்கு என்பவை அதிகாரப் பகிர்வில் இருக்க வேண்டும். இன்றும் அரசமைப்பில் அவை இருக்கின்றன. ஆனால், நடைமுறையில் கிடையாது. ஆகவே, அதற்கு அப்பாலும் சென்று, நமது கைகளில் இருந்து அவற்றைப் பிரிக்க முடியாததாக ஓர் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறை, ஓர் அரசியல் தீர்வாகக் கிடைக்குமானால் நாங்கள், எங்கள் நிலங்களிலே சீனர்கள் வந்து கால் ஊன்றுவதை நிச்சயமாகத் தடுப்போம்.

ஆனால், இந்தப் பிரச்சினையைத் தீர்க்காமல் இருக்கின்ற வரைக்கும் அந்த அதிகாரங்கள் எல்லாம் இலங்கையின் மத்திய அரசிடம்தான் இருக்கப் போகின்றன. இன்றைக்கு இருப்பதைப் போல.

ஆகவே, காணி அதிகாரம், சட்டம் - ஒழுங்கு அதிகாரம் என்பன இலங்கை மத்திய அரசிடம் இருக்கும் வரை அங்கு சீனர்கள் வந்து கால் ஊன்றுவதை எங்களாலும் தடுக்க முடியாது.

இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் அப்படி ஒன்றும் தீர்க்க முடியாத பெரிய விடயங்களே அல்ல. இந்தியாவில் இருப்பதைப் போன்ற ஓர் அதிகாரப் பகிர்வைக் கூட நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அதைப் பெற்றுத்தருவதில் இந்தியா முனைப்பாகச் செயற்படுமானால் அதை எங்களுக்குப் பெற்றுத் தருவதை இந்தியா உறுதிப்படுத்துமானால் நிச்சயமாக சீனா மட்டுமல்ல, எந்தப் பிராந்திய வல்லரசு அல்லது வேறு எந்தச் சக்தியும் இந்தியாவுக்குச் சவாலாக எங்கள் நாட்டில் நிலை கொள்வதை நாங்கள் நிச்சயமாகத் தடுப்போம் என தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு