வடமாகாண ஆளுநரின் புதிய முயற்சி..! 3 திட்டங்கள், 2 வருடங்களில் தன்னிறைவான மாகாணமாக வடமாகாணம் மாற்றப்படுமாம்..
வடமாகாணத்தில் மூன்று திட்டங்களை செயற்படுத்தி இரண்டு வருடங்களில் அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக வடமாகாண ஆளுநர் தியாகராஜா தெரிவித்தார்.
நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வடமாகாண அபிவிருத்திக்கான செயற்திட்டங்களை ஆராயும் கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான முன்னோக்கிய அபிவிருத்தி தொடர்பில் துறைசார் நிபுணர்கள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.
விவசாய துறையை முன்னேற்றுவதன் மூலம் விவசாய மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். அதுமட்டுமல்லாது அதனுடன் சார்ந்த விலங்கு வேளாண்மை மூலம்
பால் முட்டை உற்பத்தியை அதிகரித்து எமது மாகாணத்தின் தன் நிறைவை பூர்த்தி செய்து வெளி மாகாணங்களுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறோம். மேலும் எமது மாகாணத்தில்
வெளி நாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதற்கு எம்மிடமுள்ள வளங்களையும் திட்டங்களையும் ஆராய வேண்டும். நாம் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறோம் அதனூடாக பல விடயங்களை சேர் படுத்துவதற்காக எண்ணியுள்ளோம்.
மாகாணத்தில் எடுக்கப்படும் திட்ட முன்மொழிவுகளை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பி அதனை நடைமுறைப் படுத்துவதற்காகன செயற்பாடுகளை ஆளுநர் என்ற வகையில் நான் மேற்கொள்வேன்.
ஆகவே மூன்று துறைகளை முதன்மைப்படுத்தி இரண்டு வருடங்களுக்குள் அதனை முன்னோக்கி நகர்த்துவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.