வடமாகாண பாடசாலைகளில் இடம்பெற்ற ஊழல்கள், முறைகேடுகளை விசாரிக்க சுயாதீன விசாரணை குழு! ஆளுநரிடம் ஆசிரியர் சங்கம் கோரிக்கை..
வடமாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடசாலைகளில் இடம்பெறும், இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான விடயங்களை அம்பலப்படுத்திய ஆசிரியர்கள் அந்த பாடசாலைகளில் இருந்தே வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் ஊழல், மோசடிகள் தொடர்பான சுயாதீன விசாரணை குழு அமைக்கப்படுவது கட்டாயமாகும்.
மேற்கண்டவாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கேரிக்கை முன்வைத்தார். கடந்த வாரம் யாழ்.மத்திய கல்லூரியில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு கேரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண கல்வி அமைச்சில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற ஊழல், நிர்வாக முறைகேடுகள் பல மூடி மறைக்கப்பட்டு வருகிறது.
யாழ்.மாவட்டத்தில் பாடசாலை சொத்துக்களை விற்ற அதிபர், பாடசாலை நிலங்களில் எடுக்கப்பட்ட நகைகளை விற்ற அதிபர், பாடசாலையில் இருந்து அகற்றப்பட்ட மணல், கற்களை கொண்டு தனது வீட்டை அழகுபடுத்திய அதிபர்,
பாடசாலை அனுமதிக்காக பல இலட்சம் ரூபாய்களை மோசடியாகப் பெற்ற அதிபர், பாடசாலைக்கு வழங்கப்பட்ட இயந்திரத்தை தனது வீட்டில் வைத்து பயன்படுத்திய அதிபர் எனப் பல குற்றச் சாட்டுக்களை ஆதாரத்துடன் முன்வைத்தோம்.
குறித்த அதிபர்களின் குற்றச்சாட்டு தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சுக்கு வழங்கிய ஆதாரங்களான மாணவர்களின் சாட்சியங்கள், பெற்றோர்களின் சாட்சியங்கள், ஒளிப்பதிவு சாட்சியங்கள் , மற்றும் நேரடியான சாட்சியங்கள் என பலவற்றை வழங்கியிருந்தோம்.
ஆனால் வடமாகாண கல்வி அமைச்சினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக பாடசாலைகளில் இடம் பெற்ற ஊழல் முறைகேடுகளை வெளிக்கொண்டுவந்த ஆசிரியர்களை அந்தப் பாடசாலைகளில் இருந்து இடமாற்றம் செய்தமையே அவர்களின் நடவடிக்கையாக காணப்பட்டது.
மோசடிகள் தொடர்பாக விசாரணை குழு ஒன்று ஏற்கனவே அமைக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகளுக்கு இதுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் குறித்த ஒரு பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் தனக்கு அப்பாடசாலையின் அதிபர் அச்சுறுத்தல் இருப்பதாக இடமாற்றம் கோரிய நிலையில்
விசாரணைக்குழு சென்றபோது அவர் பாடசாலையில் இல்லை என்பதற்காக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாரிய மோசடிகள் செய்தவர்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில் இணைய வழியில் வழங்கிய ஆசிரியர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை முறையற்ற செயற்பாடாகும்.
கடந்த மாதம் 2ஆம் திகதி வடக்கு மாகாண புதிய ஆளுநருக்கும் பிரதம செயலாளருக்கு குறித்த விடயங்களை தெளிவுபடுத்தி நடவடிக்கை எடுக்குமாறு எழுத்து மூலம் கடிதம் அனுப்பி இருந்தோம்.
ஆகவே வடமாகாண கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகளை விசாரணை செய்ய வடமாகாண ஆளுநர் சுயாதீன விசாரணை குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.