ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன், மாணவனை 200 தோப்பு கரணம் போடவைத்த ஆசிரியர்! யாழ்ப்பாணத்தில் இரு சம்பவங்கள், ஆசிரியர்களுக்கு உளவள சிகிச்சை வேண்டும்..
யாழ்.கொடிகாமம் திருநாவுக்கரவு மத்திய கல்லுாரியில் தரம் 7ல் கல்வி கற்கும் மாணவர் மீது ஆசிரியர் தாக்குதல் நடத்தியதில் பாதிக்கப்பட்ட மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனின் காது பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், உளரீதியான தாக்குதலும் இடம்பெற்றுள்ளதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்களால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.இதேபோல் பருத்தித்துறை - புற்றளை மகாவித்தியாலயத்தில்
நேற்றய தினம் தரம் 6ல் கல்வி கற்கும் மாணவனை 200 தடவைகள் தோப்புக்கரணம் போடுமாறு ஆசிரியர் தண்டணை கொடுத்திருக்கின்றார்.
இதனால் மாணவன் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளான், இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் பாடசாலைக்குச் சென்று விசாரித்த நிலையில் மாணவனை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும்,
சிகிச்சைக்கான சகல செலவுகளையும் தாங்களே தருவதாக அதிபர் பேரம் பேசியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி இரு சம்பவங்களுடன் சேர்த்து அண்மைய நாட்களில் 3 சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், உளவள ஆற்றுப்படுத்தல் தேவையான பல ஆசிரியர்கள் வடக்கு கல்வித்துறையில் உள்ளதாக
சுட்டிக்காட்டியிருக்கும் பெற்றோர் அவ்வாறான ஆசிரியர்களுக்கு உளவள சிகிச்சை அல்லது ஆற்றுப்படுத்தல் வழங்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.