அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியும் மட்டுப்படுத்தப்படும்! நிதியமைச்சர் அதிர்ச்சி தகவல்..
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் இனிவரம் காலங்களில் மட்டுப்படுத்தப்பட்டு தேசிய உற்பத்தி மேம்படுத்தப்படும். என கூறியிருக்கும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ, அதற்கு மக்கள் ஒத்துழைக்கவேண்டும் எனவும் கூறியிருக்கின்றார்.
விவசாயத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இரசாயன உரம் மற்றும் இரசாயன கிருமிநாசினி இறக்குமதிக்காக தனியார் தரப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிலைபேறான விவசாயம் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் கிடையாது. நிலைப்பேறான விவசாய கொள்கையை செயற்படுத்துவதற்காக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தின் ஊடாக நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தற்போது வெளிநாட்டு கையிருப்பு பிரதான பிரச்சினையாகவுள்ளது.
அரசாங்கத்திடமிருந்த கையிருப்பு அத்தியாவசிய உணவு பொருட்கள், மருந்து, எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கும், அரச முறை கடன்களை மீள செலுத்துவதற்கும் செலவழிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்படும் பால்மா மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கிராமிய அபிவிருத்திக்காக வரவுசெலவு திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய உற்பத்திகளை மேம்படுத்த நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.