வடக்கில் கரையொதுங்கிய 6 சடலங்களும் யாருடையவை?
வடக்கின் கடற்கரையோரங்களில் கரையொதுங்கியுள்ள 6 சடலங்களுக்குரிய ஆண்கள் யார் என்பதனை இலங்கை பொலிஸாரால் இதுவரையில் ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை? சடலங்கள் கரையொதுங்குவதற்கு காரணம் என்ன? இவ்வாறு சடலங்கள் கரையொதுங்குவதற்கு பொறுப்புக்கூறுவது யார்? என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பியான எஸ். ஸ்ரீதரன் சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு, சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.
கடந்த 27 ஆம் திகதி வல்வெட்டித்துறை, பருத்தித்துறை பகுதிகளில் இரு உடல்கள் கரையொதுங்கியுள்ளன. 28 ஆம் திகதி நெடுந்தீவில் ஒரு உடலும் 30 ஆம் திகதி கட்டைக்காட்டுப்பகுதியில் ஒரு உடலும் 2 ஆம் திகதி பருத்தித்துறை சக்கோட்டையில் ஒரு உடலும் வெற்றிலைக்கேணியில் ஒரு உடலுமாக மொத்தம் 6 உடல்கள் கரையொதுங்கியுள்ளன.
இதில் ஒன்று மட்டுமே உள்ளாடையுடன் காணப்பட்டுள்ளது. இவர்கள் யார் என்பது இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஏன் இவ்வளவு காலம் எடுக்கின்றது? இலங்கைப் பொலிஸார் கெட்டிக்காரர்கள், பத்திரிக்கையாளர்களை சுடுவார்கள், மக்களை சுடுவார்கள், ஆனால் அவர்களுக்கு ஏன் இதனை மட்டும் கண்டுபிடிக்க முடியாதுள்ளது?
இங்கு கரையொதுங்கிய உடல்களில் ஒருவரின் கையில் சமய நூல் கட்டப்பட்டுள்ளது. இன்னொருவர் உடலில் 3 நாட்களுக்கு முதல் வெட்டுக்காயங்களுக்காக இடப்பட்ட தையல் அவிழ்க்கப்படாத நிலையில் உள்ளது.
இன்டர்போல் முதல் உலகம் வரை பிரபலமாகி பேசப்படுகின்ற இலங்கை பொலிஸாரால் ஏன் இன்னும் இந்த உடல்களுக்குரியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை? இந்த நாட்டில் சடலங்கள் அதுவும் ஆண்களினுடைய சடலங்கள் கரையொதுங்குகின்றது என்றால் இதற்கு யார் பொறுப்புக்கூறுவது? இதற்கு என்ன காரணம்?
வடக்கு, கிழக்கு மக்களை குறிவைத்ததாகவே பெருமளவு நிதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் பல கட்டிடங்கள் இலங்கையின் முப்படைகளினால் வடக்கில் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர்களுடைய தனியார் காணிகளில் கட்டுவதற்காக செலவிடப்படவுள்ளன. கடந்த வாரம் கூட மாதகல், பருத்தித்துறை, வலிகாமம் வடக்கு போன்ற பிரதேசங்களில் மக்களின் காணிகளை அளக்கும் நடவடிக்கைகள் படையினர் நில அளவைத்திணைக்களம் மூலம் முன்னெடுக்கின்றனர்.
இவ்வாறான நிலங்களில் பாரிய கட்டிடங்கள், விகாரைகள் அமைக்கப்படுகின்றன. இவை எல்லாம் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் தான் நடக்கின்றனவா? 'காணி அளப்பதற்கு யாரும் இடையூறாக இருந்தால் அது அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி மக்களாக இருந்தாலும் சரி பிடித்து உள்ளுக்கு தள்ளுவேன்' என வடக்கிற்கு வந்துள்ள புதிய ஆளுநரான ஜீவன் தியாகராஜா கூறுகின்றார்.
இந்த அரசு இந்த ஆளுநரை காணி பிடிப்பதற்காகவா வடக்கிற்கு அனுப்பியுள்ளது? வடக்கிற்கு பாத்தியா ஆளுநராக வந்ததது, நல்லிணக்கத்தை உருவாக்கி அபிவிருத்தியை ஏற்படுத்தவா அல்லது தமிழ் மக்களின் காணிகளை பறித்து இராணுவத்துக்கும் கடற்படைக்கும் கொடுக்கவா நியமிக்கப்பட்டுள்ளார்?
எனவே, இவரை வடக்கிற்கான ஆளுநராக நியமித்தவர்கள் அது தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். என்றார்.