புதிய அரசியலமைப்பு சாத்தியமில்லை! அப்படியே வந்தாலும் அது மிக மோசமான பௌத்த சிங்கள நிலைப்பாட்டையே கொண்டிருக்கும்..

ஆசிரியர் - Editor I
புதிய அரசியலமைப்பு சாத்தியமில்லை! அப்படியே வந்தாலும் அது மிக மோசமான பௌத்த சிங்கள நிலைப்பாட்டையே கொண்டிருக்கும்..

இலங்கையில் புதிய அரசியலமைப்பு வரப்போவதில்லை. என கூறியிருக்கும் ஐ.நாவின் மத்திய கிழக்கு, ஆசிய, மற்றும் பசுபிக் நாடுகளுக்கான அரசியல் விவகார திணைக்களத்தின் உதவிப் பொதுச் செயலாளர் காலித் கியாரியிடம் கூறியுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு, 

அப்படியே ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும் கூட அது மிக கடுமையான சிங்கள பௌத்த நிலைப்பாட்டை கொண்டிருக்கும் அரசியலமைப்பாகவே இருக்கும் எனவும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். 

காலித் கியாரிக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று மாலை நடைபெற்றது.  தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் குழுவின் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.  சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், 

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கொழும்பிலுள்ள ஐ.நா.  அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான ஐ.நா.  வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கரும் கலந்துகொண்டார்.  ஒரு மணி நேரத்துக்கு இச்சந்திப்பு நீண்டிருந்தது.  

இதன்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் நிலை, தமிழர்களின் காணி ஆக்கிரமிப்பு, ஜெனிவா தீர்மானம் உட்பட பல விடயங்கள் ஆராயப்பட்டன. இலங்கையில் காணப்படும் நிலைமைகள் தொடர்பாக காலித் கியாரி எழுப்பிய சந்தேகங்களுக்கு சம்பந்தன் விளக்கமளித்தார்.

 போர் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் தமிழ் மக்களுடைய காணிகள் பல்வேறு விதமாக சுவீகரிக்கப்படுகிறது.  வனவளத் திணைக்களம் மூலமாக, மகாவலி திட்டம் என பல்வேறு விதமாக தமிழ் மக்களுடைய காணிகள் அபகரிக்கப்படுகின்றன எனத் தெரிவித்த சம்பந்தன், 

இதன் மூலமாக தமிழ் மக்களைக் காணாதவர்களாக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.  இந்தியாவுக்கு அகதிகளாகக் குடிபெயர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் திரும்பிவர முடியாமல் உள்ளனர். அவர்கள் திரும்பி வந்தாலும், குடியிருப்பதற்கு காணி இல்லாத நிலைமை இதன் மூலம் ஏற்படுத்தப்படுகிறது எனச் சுட்டிக்காட்டினார்.

ஜெனிவாவில் ஐ.நா.  மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம் வரப்போகின்றது என்றவுடன் தமிழ் மக்கள் மத்தியில் அது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது.  ஆனால், இவ்விடயத்தில் எதுவும் நடைபெறாமலிருப்பது மக்களுக்கு கடும் அதிருப்தியையும், 

ஏமாற்றத்தையும் கொடுப்பதாகவும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்னர்கள்.  “குறைந்த பட்சம் தீர்மனத்தில் உள்ள அம்சங்கள் – குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என வலியுறுத்திய கூட்டமைப்பினர், அண்மையில் கூட பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 

56 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.  அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துகின்றது.  ஆதனால் இவ்விடயத்தில் அரசின் மீது அழுத்தம் கொடுப்பது ஐ.நா.வின் பொறுப்பு எனவும் கூட்டமைப்பினர் குறிப்பிட்டனர்.

 புதிய அரசியலமைப்பு, ஒரு நாடு ஒரு சட்டம் என்ற அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாக ஐ.நா.  அதிகாரி கேள்வி எழுப்பிய போது பதிலளித்த சம்பந்தன், ஒரு நாடு ஒரு சட்டம் என்பதன் மூலம், அதிகாரப் பகிர்வுக்கு தாம் தயாராக இல்லை என்பதைத்தான் அரசாங்கம் சொல்ல முற்படுகின்றது.  

அதேவேளை, சிங்களத் தலைவர்கள் யாரும் அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக இல்லை.  ஒரு நாடு ஒரு சட்டம் என்பதன் மூலமாகவும் அரசாங்கம் இதனைத்தான் சொல்ல முற்படுகின்றது.  புதிய அரசியலமைப்பு ஒன்று வரப்போவதில்லை.  அவ்வாறு வந்தாலும் அது கடுமையான சிங்கள பௌத்த 

நிலையில் உள்ள அரசியலமைப்பாக|வே இருக்கும் எனத் தெரிவித்தார். இங்குள்ள நிலைமைகள் குறித்து தமக்கு பெருமளவுக்குத் தெரியும் எனவும், தினசரி இது தொடர்பான தகவல்கள் தமக்கு கிடைப்பதாகவும் ஐ.நா தெரிவித்தார்.  

பிரதிநிதி, இவ்விடயங்கள் தொடர்பில் தாம் கவனத்திற்கொண்டு, உரிய செயன்முறைகளை முன்னெடுப்பதாகவும் கூட்டமைப்பினரிடம் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு