நிலைமை மோசமானால் மீண்டும் பயணத்தடை..! மாற்று வழியில்லை சுகாதாரத்துறை திட்டவட்டம்..
நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் நிலைமை மேலும் மோசமடைந்தால் மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பதை தவிர வேறு வழியில்லை. என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.
தென்மாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
தென் மாகாணத்தில் மாத்திரமின்றி மேலும் பல மாகாணங்களிலும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இது ஏற்கனவே எம்மால் அறிவிக்கப்பட்டவொரு விடயமாகும். எவ்வாறிருப்பினும் ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இந்த நிலைமை சடுதியாக அதிகரிக்குமாயின் பாரதூரமான சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் நீண்ட காலத்திற்கு பின்னர் திறக்கப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டிய நிலைமை ஏற்படும். அதனை தவிரப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
எவ்வாறிருப்பினும் இதனை பாடசாலைகளில் மாத்திரம் வரையறுக்கப்பட்ட ஒன்றாகக் கருத முடியாது.இது முழு சமூகத்தையும் தாக்கும் நோய் நிலைமையாகும். அதாவது பாடசாலைகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் அதன் தொடர்ச்சியாக வீடுகளிலும்,
ஏனைய இடங்களிலும் நிச்சயம் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வாறான தொற்று அதிகரிப்பு அதிகளவானதாகக் காணப்பட்டால் மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதையன்றி மாற்று வழியெதுவும் இல்லாமல் போகும்.
எனவே சுகாதார கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றினால் தற்போதுள்ளதைப் போன்று அன்றாட செயற்பாடுகளை வழமையைப் போன்று தடையின்றி முன்னெடுத்துச் செல்ல முடியும்.
அவ்வாறில்லை என்றால் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு பதிலாக போக்குவரத்து கட்டுப்பாடுகள் உள்ளிட்ட ஏனைய சுகாதார கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க வேண்டிய நிலைமையே ஏற்படும் என்றார்.