முல்லைத்தீவு – கோவிற்குடியிருப்பில் மக்கள் குறைகேள் சந்திப்பு..

முல்லைத்தீவு – கோவிற்குடியிருப்புப் பகுதியில் நேற்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்று இடம்பெற்றள்ளது.
குறித்த சந்திப்பில் மக்களின் கோரிக்கைக்கு அமைய முல்லைத்தீவு மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை (பூலோகம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் திரு. சின்னையா பத்மநாதன் ஒழுங்குபடுத்தலில், கோவிற்குடியிருப்பு ஓய்வு மண்டகத்தில் குறித்த மக்கள் குறைகேள் சந்திப்பு இடம்பெற்றது.
மேலும் இச்சந்திப்பில் வீட்டுத்திட்டம் வழங்குதல் மற்றும் வீதி திருத்தப்பணி, துப்பரவு செய்யப்படாது பற்றைக்காடாக காணப்படும் காணிகளால் மக்கள் எதிர் நோக்கும் சிக்கல்கள் உள்ளிட்ட கோரிக்கைளும் குறைகளும் மக்களால் முன்வைக்கப்பட்டன.
தொடர்ந்து மக்களிடையே உரையாற்றிய ரவிகரன் ,
மக்களின் குறைகளை அறியும்பொருட்டு ஒவ்வொரு ஊரிலும் குறைகேள் சந்திப்பை நடாத்திவருகின்றேன். அந்தவகையில் இன்றைய நாள் உங்களின் ஊருக்கு வருகைதந்து உங்கள் ஊர்சார்ந்த குறைகளை என்னால் அறிய முடிந்துள்ளது என்றார்.
வீட்டுத்திட்டம் வழங்குதல் தொடர்பாக மாகாணசபை அமர்வுகளிலும்இ மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களிலும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதாகவும் மேலும் இது தொடர்பாக மாவட்டச்செயலாளருடன் பேசியதாகவும் முன்னுரிமை அடிப்படையில் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவிருப்பதாக அவர் கூறியதாகவும் தெரிவித்தார்.
வீதிகள் தொடர்பாக உரிய இடங்களில் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் தற்போது புதிதாக பிரதேசசபையும் உருவாக்கப்பட்டிருப்பதால் அதன் ஊடாகவும் இனி வீதி சார்ந்த கோரிக்கைகளுக்கு தீர்வுகாணமுடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும் ஊரில் பற்றைக்காடாக காட்சி தரும் காணிகளினுடைய விபரங்களை தன்னிடம் கையளிக்குமாறும் உரிய இடங்களில் பேசி குறித்தசிக்கலுக்கு தீர்வுகாண முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தொம்மைப்பிள்ளை குறித்த பகுதியில் காணப்படும் இக்குறைகளை சீர்செய்வதற்கு முயற்சி எடுப்பேன் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ரவிகரன் மற்றும் தொம்மைப்பிள்ளை மிக வறுமையடைந்த ஒரு குடும்பத்தின் வீட்டை சென்று பார்வையிட்டு அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தனர்.
அதனையடுத்து மிக மோசமாக பாதிப்படைந்து காணப்படும் வீதி ஒன்றை பார்வையிட்ட இருவரும் அதனை சீர்செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.