இரட்டைவாய்க்கால்- மாத்தளன் வீதி திறந்துவைப்பு...

இரட்டைவாய்க்கால், மாத்தளன் சாலை வீதியின் குறிப்பிட்ட தூரமாவது ஒதுக்கீடுகளின் மூலம் மறுசீரமைப்புச் செய்தமையை மதிப்பளித்து முறைப்படி ஊர்மக்கள் ரவிகரன் மூலமாக திறந்து வைத்தனர்.
இது தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
இரட்டைவாய்க்கால், மாத்தளன்: சாலை வீதி 13.69 கிலோ மீற்றர் தூரமாகும். இறுதிப்போர்க்காலப்பகுதியில் இப்பகுதியில் முடக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான எமது மக்கள் பாவித்த இந்த வீதி இன்றுவரை முழுமையாக சீராக்கப்படவில்லை.
போரின்போது தாக்குதல்களில் சிதறுண்ட இவ்வீதியை இன்றுவரை சீராக்காத நிலையே காணப்படுகின்றது.
தனித்துவிடப்பட்டவர்களாக முள்ளிவாய்க்கால் மேற்குஇ வலைஞன்மடம், அம்பலவன் பொக்கணை, இடைக்காடு, மாத்தளன், பழைய மாத்தளன் பகுதிமக்கள் காணப்படுகின்றார்கள்.
மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களில் பலதடவை கதைத்துவிட்டோம். தீர்வில்லாத நிலையே காணப்படுகின்றது.
வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் 2017இல் வீதிக்காக தலா ஐந்து மில்லியன் உரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. என்னுடைய ஒதுக்கீட்டையும் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு ஆண்டிஐயா புவனேசுவரன் அவர்களுடைய ஒதுக்கீட்டையும் சேர்த்து பத்து மில்லியன் உரூபாயினை இவ்வீதிக்காக பகுதியளவிற்கு என்றாலும் ஒதுக்கியிருந்தோம். அதற்கேற்ப சுமார் ஒரு கிலோமீற்றருக்கும் சற்று கூடுதலான தூரத்திற்கு வீதி சீர்செய்யப்பட்டது.
அதனை மதிப்பளிக்கும் முகமாக, அவ்வூர் மக்களால் நடாத்தப்பட்ட ஒரு விழாவின் போது எம்மிருவருக்கும் நன்றி தெரிவித்து முறைப்படி அத்திருத்தப்பட்ட வீதி திறந்துவைக்கப்பட்டது.
கடந்த மாதம் மாவட்டச்செயலாளருடனான கலந்துரையாடலின்போது என்னால் இது சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த வீதியானது நல்லிணக்க அமைச்சின் மூலம் செப்பனிடப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் மறுசீரமைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இம்மக்களின் மிகவும் இன்றியமையாத பாவனைக்குரியவீதியாக இது அமைகிறது என்றார்.