முல்லைத்தீவில் அரச இயந்திரம் பூரணமாக இராணுவத்தின் வசம்..

சர்வதேச நெருக்கடிக்காக முல்லைத்தீவு மாவட்டத்தினை அரசின் சகல இயந்திரங்களுமே திட்டமிட்டு படையினர் வசம் உள்ள நிலங்கள் தொடர்பில் மூடி மறைத்து பெயர் எடுக்க முனைகின்றனரா என்ற சந்தேகம் எழுவதாக முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர். து.ரவிகரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது படையினர் வசம் தமிழ் மக்களிற்குச் சொந்தமான ஆயிரத்து 150 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சினால் ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பிறிதொரு அமைச்சின் கீழ் வரும்
தேசிய நல்லிணக்க செயலணியோ 9 ஆயிரத்து 148 ஏக்கர் நிலங்கள் உள்ளதாக கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது. அவ்வாறு தேசிய நல்லிணக்க செயலணி
வெளியிட்டுள்ள தகவலில் இராணுவத்தினர் வசம் 540.29 ஏக்கர் தனியார் காணிகளும் 6 ஆயிரத்து 934.38 ஏக்கர் அரச காணியும் உள்ளதுடன் கடற்படையினர் வசம் 671 ஏக்கர் தனியார் கானியும் 44.80 ஏக்கர் அரச காணிகளும் உள்ளது. இதேபோன்று விமானப் படையினர் வசம் 958 ஏக்கர் அரச காணியுமாக மொத்தம் ஆயிரத்து 211.29 ஏக்கர் தனியார் காணிகளும 7 ஆயிரத்து 937.18 ஏக்கர் அரச காணிகளும் உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்த்து.
வட மாகாணத்திலேயே மிகவும் அதிக நிலங்களை விழுங்கி நிற்பதே முல்லைத்தீவு மாவட்டத்தினில் என்றால் மிகையாகாது. அதிகநிலங்கள் படைகள் வசம் எனவும் மகாவலி எனவும் ஒருபுறமிருக்க சிங்களக் குடியேற்றம் என்ற பெயரிலும் மாவட்டம் பறிபோகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பொறுத்த மட்டில் மாவட்டத்தின் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் விழுங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் 60 ஆயிரம் ஏக்கரில் படையினர் வசம் மட்டும் 40 ஆயிரம் ஏக்கர் வரையில் படையினர் வசமுள்ளது.
ஏனெனில் படை வசமுள்ளதாக நல்லிணக்க செயலணி கூறிய 9 ஆயிரத்து 148 ஏக்கர் நிலங்களும் தனியாருக்கும் அரசிற்கும் சொந்தமான நிலங்களாகும் இதில் முல்லைத் தீவு மாவட்டத்தினைப் பொருத்த மட்டில் கேப்பாபுலவில் மட்டும் ஒரு சிறுபகுதி நிலம் விடுவிக்கப்பட்டது. எனினும் மாவட்டத்தின் 60 வீதமான பகுதி வனவளத் திணைக்களத்தின் ஆளுகையின் உள்ளது. அந்த நிலங்களில் நிலைகொண்டுள்ள படையினரின் நிலப்பகுதிகள் தொடர்பில் இங்கே காட்டப்படவேயில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தினில் மட்டும் வனவளத் திணைக்களத்திற்குச் சொந்தமான இடங்களில் பாரிய படை முகாம்களாக 5 நிலையங்கள் உள்ளன. அதாவது ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள அம்பகாமம் பகுதியில் 8500 ஏக்கர் நிலத்தில் விமானப் படையினரின் பாரிய முகாமும் கரிப்பட்டமுறிப்பு காட்டுப்பகுதியில் 2500 ஏக்கரில் விமான நிலையத்துடன் கூடிய முகாமும் உள்ளதோடு ஏ9 வீதியில் முருகண்டிப் பகுதியில் 2 ஆயிரம் நிலத்தில் பாரிய இராணுவ முகாமும் உண்டு . அதேபோன்று கேப்பாபுலவு பகுதியில் மக்களின் நிலத்திற்கும் அப்பால் 2200 ஏக்கர் வனப்பகுதியில் பாரிய விமானப்படை முகாம் உள்ளது. இவைகளின் அளவுகள் அனைத்தும் திட்டமிட்ட வகையில் வேண்டுமென்றே சகல அமைச்சுகளினாலும் மூடி மறைக்கப்பட்டு ஓர் மாவட்டத்தின் உண்மை நிலையே மூடி மறைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தினில் இடம்பெறும் நில ஆக கிரப்புத் தொடர்பில் கூட்டமைப்பினால் வெளிநாடுகளிற்குத் தெரியப்படுத்தப்பட்ட ஆவணங்களில் இவை தொடர்பில் நாம் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டதனை மூடி மறைக்கும் நோக்கில் வேண்டுமென்றே வெளியிடப்பட்ட அரசியல் கலப்புள்ள புள்ளிவிபரங்களாகவே இதனைப் பார்க்கின்றோம். ஏனெனில் நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர்கள் இருவர் இருந்துள்ளனர் . இதன் மூலம் வெளிநாடுகளின் நெருக்குதலில் இருந்து தப்பும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை இடம்பெறுகின்றது என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்றார்.