டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருக்கு நோய் அறிகுறி இல்லாமல் திடீரென மாரடைப்பு ஏற்படும்! மருத்துவர்கள் எச்சரிக்கை..
டெல்டா வகை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு எந்தவொரு நோய் அறிகுறிகளும் தென்படாமல் மாரடைப்பு மற்றும் இருதயம் பலவீனமடையும் பிரச்சினை ஆகியன எழுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் பிரிவு விசேட நிபுணர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அதனால் கொலஸ்ட்ரால், அதிக இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மரணம் அடைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு இருதய வலி ஏற்பட்ட சுமார் 20 நோயாளர்களை தான் பரிசோதனை செய்ததாக கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு எவ்வித கொரோனா நோய் அறிகுறிகளும் காணப்படவில்லை எனவும் ஆனால் இதயம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் கூறினார். கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை காலத்தில் இவ்வாறானதொரு நிலைமையை காண முடியவில்லை என அவர் கூறினார்.
எனவே இது மூன்றாவது அலையில் டெல்டா பிறழ்வின் மூலமே ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையினால் இளம் வயதுடைய மற்றும் மத்திய வயதுடைய நபர்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்தார். அதனால் கொலஸ்ரால், அதிக இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் காணப்படும் நபர்களுக்கு
இருதய வலி, மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் அதற்கு சிகிச்சை அளிக்க விசேட வைத்திய குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.