அமைச்சரவையில் ஒரு கதை, மக்களிடமும் ஊடகங்களிடமும் வேறொரு கதை..? பங்காளி கட்சி தலைவர்களை பொரிந்து தள்ளிய பிரதமர்..
நாட்டை 3 வாரங்களுக்கேனும் நாட்டை முடக்குமாறு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை ஊடகங்களுக்கும் அம்பலப்படுத்திய ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி பங்காளிக் கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்படி தகவலை கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. இது குறித்து மேலும் தொியவருவதாவது, நேற்று திங்கள் கிழமை இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பில் வைத்தே பிரதமர் இவ்வாறு எச்சரித்துள்ளார். நாட்டை முடக்காமல் இருப்பதற்கு
அமைச்சரவையில் தீர்மானித்துவிட்டு, வெளியில் சென்று அதற்கு புறம்பாக செயற்படுவது பொருத்தமற்ற செயற்பாடாகும். எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தீர்மானத்திற்கு எதிர்ப்பு என்றால் வாயை மூடிக்கொண்டு அதை அமைச்சரவையில் தெரிவிக்கவேண்டியதுதானே
என்று குறிப்பிட்ட பிரதமர், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியது தவறு இல்லையெனவும் ஆனால் அதை ஊடகங்களுக்கு பகிர்ந்தமை தவறு எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவையில் ஒரு தீர்மானமும் வெளியில் ஒரு அறிவிப்பையும் அமைச்சர்கள் எடுப்பார்களாயின்
அமைச்சர்களிடையே ஒற்றுமை இல்லையென மக்கள் நினைப்பார்கள் எனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றைய அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி பங்கேற்பு இன்றி, பிரதமர் தலைமையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.