முல்லைத்தீவுவில் சட்டவிரோத தொழிலை தெனாவெட்டாக செய்யும் சிங்கள மீனவர்கள்

முல்லைத்தீவு கொக்கிளாய்க்கு சென்ற வடக்கு மாகாண சபையின் பேரவை தலைவர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கண்முன்னே அங்கு அத்துமீறி நிலை கொண்டுள்ள சிங்கள மீனவர்கள் தெனாவெட்டாக சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டுக் காண்பித்திருந்தனர்.
தடை செய்யப்பட்ட உழவு இயந்திர வலு கொண்டு கரவலையை இழுப்பதையே தாம் வழமையாக செய்வதாக சிங்கள மீனவர்கள் வடக்கு மாகாண சபையினருக்கு கண்முன்னே காண்பித்துள்ளனர்.
இருப்பினும் அவ் சட்ட விரோத தொழிலிலை கண்ட வடக்கு மாகாண சபையின் சிலர் அதை கண்டும் காணாததுபோல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
ஆயினும் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், க.குருகுலறாஜா ஆகியோர் சட்ட விரோதமான தொழில் செய்யும் சிங்கள மீனவர்களுக்கு அருகில் சென்றிருந்தனர்.
இவ்வாறு சென்ற போது அமைச்சர் அனந்தி சசிதரன் தனது மெய்பாதுகாவலரான சீருடையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரையும் அழைத்து சென்ற போதும் சற்றும் அச்சப்படாமல் சிங்கள மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் இயந்திர வலு கொண்டு கரவலையை தொடர்ந்து இழுத்துக் கொண்டிருந்தனர்.
தங்களை பொருட்படுத்தாது தெனாவெட்டாக சிங்கள மீனவர்கள் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டதை அவதானித்த வடக்குமாகாண சபையினர் அங்கிருந்து விலகிச் சென்றிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் நடை பெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மற்றும் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு வடமாகாண சபையினர் இன்று நேரில் சென்றிருந்த போதே சிங்கள மீனவர்கள் அவர்களுக்கு தெனாவெட்டு காண்பித்துள்ளனர்.