கொக்கிளாய் இறங்குதுறை விடுவிப்பு தமிழ் மக்களின் நேர்மைக்கும், உண்மைத் தன்மைக்கும் கிடைத்த வெற்றி.

கொக்கிளாய் இறங்குதுறை தமிழ் மக்களுக்கு சொந்தமானது என நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தமிழ் மக்களின் உண்மைக்கும், நேர்மைக்கும் கிடைத்த பரிசாக பார்க்க வேண்டியுள்ளது. என வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,
கொக்கிளாயில் தமிழ் மக்களுக்கு சொந்தமான இறங்குதுறையை மீள அமைப்பதற்காக ஏற்கனவே காலங்காலமாக பாவித்து வந்த நிலப்பரப்பில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தால் 150மீற்றர் நீளமான கரையோர நிலம் வழங்கப்பட்டது. கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் 2016.07.20 அன்று mu/mpp/ds/land/kok.east/01 ஆம் இலக்க கடிதத்தின் மூலம், கொக்களாய் சென்.அன்ரனி கடற்றொழிலாழர் அமைப்பிற்கு இதற்கான அனுமதியை வழங்கியிருந்தார்.
ஆனால் இந்த 150மீற்றர் நீளமான கரையோர நிலத்திற்குள் தங்களுடைய கரவலைப்பாடுகள் உள்ளடங்குவதாகக் கூறி கொக்கிளாய் பகுதியில் அத்துமீறி தங்கியிருந்து கடற்றொழில் செய்துவந்த சிங்கள மீனவர்கள் குழப்பம் விளைவித்தனர். அத்தோடு தமிழ் மக்களுடன் முரண்பட்டனர்.
மேலும் மத்திய நீரியல்வளத்துறை அமைச்சும், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் என்பன கொக்கிளாய்ப் பகுதியில் அத்துமீறி நுழைந்திருந்த சிங்கள மீனவர்களுக்கு ஆதரவு வழங்கியதுடன், பிரதேசசெயலரின் அனுமதியுடன் இறங்குதுறையை அமைக்கச்சென்ற தமிழ் மீனவர்களை எதிராளிகளாக்கி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கலும் செய்தனர்.
இந்நிலையில் தமிழ் மீனவர்களின் நிலையினை கருத்திற் கொண்டு அப்பகுதியின் மக்கள் சார்பாளன் என்கின்ற வகையில் மாகாணசபை அமர்வுகளில் பிரேரணைகளை முன்வைத்ததுடன், தொடர்ந்தும் இப்பிரச்சினை தொடர்பாக வலியுறுத்தியிருந்தேன். அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களிலும் குறித்த பிரச்சினை தொடர்பாக தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகித்தேன். ஆயினும் இப்பிரச்சினைக்கு தீர்வுகள் எதுவும் எட்டப்படாத நிலையே தொடர்ந்தும் காணப்பட்டுவந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்றுவந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 06.03.2018அன்று வழங்கப்பட்டிருக்கின்றது.
குறித்த தீர்ப்பில் கொக்கிளாய் இறங்குதுறை நிலம் தமிழ் மீனவர்களுக்கே சொந்தமானது எனவும். அந்நிலத்தினை கரைதுறைப்பற்று பிரதேச செயலர் மற்றும் நில அளவைத்திணைக்களம் ஆகியன உடனடியாக அளவீடுசெய்த இடத்தில் எல்லைகளை இட்டு தமிழ் மீனவர்களுக்கு வழங்கவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீதிமன்றின் உத்தரவு அமைச்சரவை தீர்மானத்திலோ, வர்த்தமானி அறிவித்தல்களிலோ எதிர்காலத்திலும் மீறப்படக்கூடாது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றின் குறித்த தீர்ப்பானது கடந்த இரண்டு வருடங்களாக மிகுந்த இன்னல்களை அனுபவித்து வந்த தமிழ் மீனவர்களின் உண்மைத் தன்மைக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன். மேலும் நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களுடைய ஏனைய காணிகளையும் மீட்டெடுத்துவிடமுடியும் என்கிற நம்பிக்கையும் உற்சாகமும் நம் அனைவருள்ளும் பிறந்துள்ளது என்றார்.