மீண்டும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா தொற்று!
கொவிட் தொற்று நான்காவது சுற்று சிறைச்சாலைக்குள் பரவத் தொடங்கியுள்ளது. இவ்வாறு பரவிய தொற்று தமிழ் அரசியல் கைதிகளையும் விட்டு வைக்கவில்லையென குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நடேசன் தருமராசா என்ற தமிழ் அரசியல் கைதி கொரோனா தொற்றுக்கு ஆளாகி வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே போன்று கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த செல்லத்துரை கிருபாகரன் என்ற அரசியல் கைதிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை பொறுத்தமட்டில் இவர்கள் இரண்டாவது தடவையாக இந்தத் தொற்றுப் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மிக நீண்டகாலமாக சிறைத்தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு வகையிலான நோய்நொடிகளால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பமும் நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக அவர்களுக்கு போசாக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் அற்று அவர்கள் உடல் உள ரீதியில் அதிக பலவீனம் அடைந்தவர்களாக இருக்கிறார்கள்.
நோயெதிர்ப்பு சக்தியை இழந்துள்ள இவர்களை மிக இலகுவாக தொற்று நோய்கள் பற்றிக்கொள்கின்றன. இந்த நிலை தொடருமானால் உயிராபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது. ஆகவே, தற்போது நாட்டுக்கு கணிசமான அளவு தடுப்பூசிகள் தருவிக்கப்பட்டு வருகின்றதன் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம்.
அந்த வகையில், நெடுநாள் நோய் நொடிகளோடு சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை ஆபத்தில் இருந்து மீட்க வேண்டியது அரசின் கடமையாகும்.