SuperTopAds

ஜனநாயக மீறலை கண்டித்து வாகனப் பேரணி!

ஆசிரியர் - Admin
ஜனநாயக மீறலை கண்டித்து வாகனப் பேரணி!

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை கண்டித்து பலதரப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டிணைந்த ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

போராட்டகாரர்கள் வாகன பேரணியை தாமரை தடாக கலையரங்கு வீதியில் ஆரம்பித்து லிப்டன் சுற்றுவட்டம், மருதான வீதி, டெக்னிகல், புறக்கோட்டை, காலி முகத்திடல், கொள்ளுப்பிட்டி, விகாரமாதேவி பூங்கா வரையில் சென்று போராட்டத்தை நிறைவு செய்தனர்.

ஒன்றிணைந்த ஆசிரிய சேவை சங்கம், தபால் சேவைகள் சங்கம், வங்கி சேவையாளர் சங்கம் உள்ளிட்ட பெரும்பாலான தொழிற்சங்கத்தினரும், மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கத்தினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை முன்னிலைப்படுத்தி கடந்த வாரம் இலங்கை ஆசிரிய சங்கத்தின் செயலாளர் மற்றும் சிவில் அமைப்பினர் பலவந்தமான முறையில் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டகாரர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் வாகன பேரணியில் ஈடுப்பட்டனர்.

அரசாங்கத்தின் ஜனநாயக செயற்பாட்டை கண்டிக்கவும், நீதியை நிலைநாட்டவும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்பது இப்போராட்டத்தின் பிரதான அம்சமாக காணப்பட்டது.

கொவிட் -19 வைரஸ் தனிமைப்படுத்தல் சட்டத்தை கொண்டு ஜனநாயக கொள்கைக்கு முரணாக அரசாங்கம் செயற்பட கூடாது என போராட்டகாரர்கள் கோசமெழுப்பினர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இலவச கல்விக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் அறிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன. பல்கலைக்கழக சட்ட மூலத்தை அரசாங்கம் மீள பெற்றுக் கொள்ள வேண்டும். என்பதை போராட்டகாரர்கள் வலியுறுத்தினார்கள்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை தவறான முறையில் செயற்படுத்தி கைது செய்யப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொழிற்சங்க தலைவர்களையும், சிவில் அமைப்பினரையும் நிபந்தனையற்ற வகையில் விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்கள்.