“லம்ப்டா” திரிபு வைரஸ் நாட்டுக்குள் எந்தச் சந்தர்ப்பத்திலும் பரவலாம்! தடுப்பு நடவடிக்கைகள் 100 வீதம் பலனளிக்காது என்கிறது சுகாதாரத்துறை..

ஆசிரியர் - Editor I
“லம்ப்டா” திரிபு வைரஸ் நாட்டுக்குள் எந்தச் சந்தர்ப்பத்திலும் பரவலாம்! தடுப்பு நடவடிக்கைகள் 100 வீதம் பலனளிக்காது என்கிறது சுகாதாரத்துறை..

புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள லம்ப்டா திரிபு வைரஸ் நாட்டில் பரவுவதைத் தடுப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ள பதில் சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத், 

இருந்தும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் துல்லியமற்ற தன்மை மற்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தின் பின்னரும் ஒருவரின் உடலில் நிலைத்திருக்கக்கூடிய வைரஸ் திரிபுகளின் தன்மை ஆகிய காரணங்களினால் 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் லம்ப்டா வைரஸ் இலங்கைக்குள் உள்நுழையக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எனினும் அனைவரும் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றும் பட்சத்தில் ல்ம்ப்டா வைரஸ் உள்நுழைந்தாலும், 

அதன் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று பிரதி சுகாதாரப்பணிப்பாளர் விசேட வைத்தியநிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் நேற்று புதன்கிழமை அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் 

ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட 

தடுப்பூசி நிலையங்களில் அஸ்ராசெனேகா முதலாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள 55 - 69 வயதிற்குட்பட்டோருக்கு இரண்டாம்கட்டமாக பைஸர் தடுப்பூசியை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி முதலாம்கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டபோது கையடக்கத்தொலைபேசி இலக்கத்தை வழங்கியவர்களுக்குக் குறுஞ்செய்தி மூலமும் நிலையான தொலைபேசியின் இலக்கத்தை வழங்கியவர்களுக்கு 

தொலைபேசி அழைப்பின் மூலமும் உரிய விபரங்கள் அறிவிக்கப்படும். எனவே யாரும் பதற்றமடையத்தேவையில்லை. அதேவேளை எதிர்வரும் காலத்தில் பைஸர் தடுப்பூசி முதலாம்கட்டமாக வழங்கப்படும்போது 

அதற்கு இரண்டாம்கட்டத் தடுப்பூசியும் வழங்கப்பட வேண்டும்.மேலும் சுகாதாரப்பணியாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக தடுப்பூசி வழங்கல் செயற்பாடுகள் பாதிப்படைவதைத் தவிர்ப்பதற்காகவே 

இராணுவத்தினரால் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. அச்சேவைக்கான அவசியம் தொடர்ந்தும் காணப்படும் பட்சத்தில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

அடுத்ததாக கொவிட் - 19 வைரஸின் எந்தவொரு திரிபுகளும் அவை இனங்காணப்படும் நாடுகளிலிருந்து அதிகளவானோர் பயணங்களை மேற்கொள்ளும் ஏனைய நாடுகளுக்கே விரைவாகப் பரவுகின்றன. 

எனவே தென்அமெரிக்காவில் இனங்காணப்பட்டிருக்கும் திரிபடைந்த லம்ப்டா வைரஸானது, அங்கிருந்து இலங்கைக்கு வருகைதருபவர்கள் மூலம் பரவக்கூடும். எனவே அந்த திரிபு எப்போது இலங்கையில் பரவும் என்று குறிப்பாகக் கூறமுடியாது. 

ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அது இலங்கையிலும் பரவக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. பி.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மூலம் இதன் பரவலை இயலுமானவரையில் கட்டுப்படுத்த முடியும்.

ஆனால் பி.சி.ஆர் பரிசோதனைகள் நூற்றுக்கு நூறு சதவீதம் சரியானவை என்று கூறமுடியாது. அதிலும் வழுக்கள் ஏற்படக்கூடும் என்பதால், சில சந்தர்ப்பங்களில் தொற்றாளரை அடையாளங்காணமுடியாமலும் போகலாம்.

அதுமாத்திரமன்றி 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்திற்கும் அதிக காலம் சிலரது உடலில் இந்த வைரஸ் திரிபுகள் நிலைத்திருக்கக்கூடும். ஆகவே எம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் 

அனைத்து சுகாதாரப்பாதுகாப்புக் கட்டுப்பாடுகளையும் தாண்டி, இந்த லம்ப்டா வைரஸ் இலங்கையிலும் பரவக்கூடும். ஆகவே சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றினால், 

இந்த வைரஸ் நாட்டிற்குள் வந்தாலும் அதன் பரவலைக் கட்டுப்படுத்தமுடியும் என்று குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு