ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொரோனா தொற்றினால் அடுத்தடுத்து மரணம்! விசாரணைக்கு சுகாதார அமைச்சர் உத்தரவு..
ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்த நிலையில் அது குறித்த விசாரணைகளை நடாத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி உத்தரவிட்டுள்ளார்.
அது போன்ற மரணங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது தற்காத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த சம்பவம் குறித்து சுகாதார பிரிவுகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று
சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, கொரோனா வைரஸ் இறப்புகள் குறித்த அறிக்கையைத் தொகுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மத்திய மாகாணம் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு
அறிவுறுத்தியுள்ளார். 71 வயதான தந்தை ஜூன் 2ஆம் திகதி உயிரிழந்தார். 68 வயதான தாய் ஜூன் 17ஆம் திகதி உயிரிழந்தார். இவர்களது 39 வயது மகன் ஜூன் 23ஆம் திகதி உயிரிழந்தார்.
மூவரும் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தனர் என்று சுகாதாரத் துறையினால் அறிக்கையிடப்பட்டுள்ளது.