பயணத்தடை தளர்வு தொடர்பில் இராணுவ தளபதி விளக்கம்! மக்களின் கைகளில் பொறுப்பு, தவறினால் நாடு முடக்கப்படுவதை தடுக்க முடியாது..
நாட்டில் பயணத்தடை தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் எதிர்வரும் நாட்களில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயப்படுவது கட்டாயம் என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் பயணத்தடை அமுல்ப்படுத்துவதை தவிர்க்க முடியாது. தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு மக்கள் உதவ வேண்டும்.
தொற்றாளர்கள் அதிகரித்தால் பயணத்தடை அல்லது முடக்க நிலையை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே, மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றல் மற்றும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றிச் செயற்பட வேண்டும்.
பயணத்தடை நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான தடை தொடரும்.நாட்டின் அடுத்தகட்ட நிலைமை மக்கள் கையிலேயே உள்ளது. யாருக்குக் கொரோனாத் தொற்று உள்ளதென யாருக்கும் தெரியாது.
இதனால் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார்.