SuperTopAds

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பல வர்த்தக நிலையங்கள் கல்முனை பிராந்தியத்தில் திறப்பு-மக்கள் விசனம்

ஆசிரியர் - Editor III
கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பல வர்த்தக நிலையங்கள் கல்முனை பிராந்தியத்தில் திறப்பு-மக்கள் விசனம்

கொரோனா 3 அலையின் வீரியம் அதிகரித்துள்ள நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையினால் வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகளை பல வர்த்தக நிலையங்கள் மீறி வருகின்றன.

கடந்த திங்கட்கிழமை(10) அன்று    கல்முனை பிராந்தியத்தில் கொரோனா 3 ஆவது அலையை  கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும் கூட்டம்   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் பணிப்பாளர் ஜி. சுகுணனின் தலைமையில் நடைபெற்ற வேளை   கொரோனா கட்டுப்பாட்டு நிலைகள் தொடர்பிலும் சுகாதார விதிமுறைகளை மீறி சாய்ந்தமருதில்  நடைபெற்ற நிகழ்வொன்று தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதுடன் கல்முனை பிராந்தியத்தில்  எதிர்வரும் மூன்று நாட்களுக்கு இரவு 7 மணி முதல் வர்த்தக நிலையங்கள் மூடப்பட வேண்டும் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதற்கமைய குறித்த தகவல் ஊடகங்களில் வெளியாகியதை அடுத்து கல்முனை பிராந்தியத்தில் அநேகமான வர்த்தக நிலையங்கள் இரவு 7 மணிக்கு முன்னர் இழுத்து மூடப்பட்டிருந்ததுடன் வர்த்தகர்களும் ஒத்துழைப்புகளை வழங்கி இருந்தனர்.

மற்றும் பொலிஸாரும் இராணுவத்தினரும் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் மூடப்பட்டிருக்காத வர்த்தக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்து  வர்த்தக நிலையங்களை மூடினர்.

இருந்த போதிலும் சில ஹோட்டல்கள் ஆடையகங்கள் குறித்த நேரத்திற்கு மூடப்படாமல் பின்னிரவு வரை கல்முனை, நிந்தவூர் ,சம்மாந்துறை, மருதமுனை பகுதிகளில்  திறந்து வியாபார நடவடிக்கையினை தொடர்ந்து வந்திருந்தன.

இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் விசனம் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் உரிய நேரத்திற்கு மூட தவறிய வர்த்தக உரிமையாளர்களுக்கு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டுள்ளது.