அரசியலமைப்பின் அடிப்படையில் செயற்பட அனுமதியுங்கள்..! ஐ.நாவில் இலங்கை சமர்பிக்கப்போகும் பிரேரணை, இன்று கூட்டத்தொடர் ஆரம்பம்..
இலங்கை ஒரு இறமையுள்ள நாடு என்ற அடிப்படையில் நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்டு நடப்பதற்கு இடமளிக்கப்படவேண்டும். எனக்கோரி ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் இம்முறை பிரேரணை ஒன்று சமர்பிக்கப்படவுள்ளது.
குறித்த புதிய பிரேரணையை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை தற்போது வெளிவிவகார அமைச்சு மற்றும் துறைசார் இதர அமைப்புக்கள் மட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்த்தர் ஒருவர் ஊடகங்களுக்கு தகவல் வழங்கும்போது, ஒரு பிரேரணையை கொண்டு வருவதற்கான உரிமை எங்களுக்கு இறைமையுள்ள நாடு என்ற வகையில் இருக்கின்றது.
சகல நாடுகளுக்கும் அந்த உரிமை இருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இலங்கை சார்பில் ஒரு புதிய பிரேரணை இம்முறை ஜெனிவா மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் என்பது உறுதியாக தெரிகின்றது.
ஆனால் அரசாங்கத்தின் சார்பில் அந்த விடயம் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை முதல் மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இதன்போது இலங்கை தொடர்பான விவாதம் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பேரவையில் சமர்ப்பிப்பார்.
அதன் பின்னர் பல்வேறு நாடுகளும் இலங்கை தொடர்பாக தமது கருத்துக்களை முன்வைக்கும். அதேபோன்று இம்மாதத்தின் இறுதியில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணையை கனடா,ஜேர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தாக்கல் செய்ய உள்ளன.
இது தொடர்பான ஒரு புதிய வரைவு தற்போது இணையதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் அவ்வாறு ஒரு பிரேரணையை குறிப்பிட்ட நாடுகள் முன்வைக்கும் பட்சத்தில் அதனை எதிர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.
இலங்கை அரசாங்கம் பிரேரணையை எதிர்க்கும்போது அது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வகையில் மார்ச் மாதம் 22 ஆம் திகதி இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஜெனிவாவில் நடைபெறவிருக்கின்றது.
மேலும் இலங்கை ஒரு பிரேரணையை ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கும்போது அது தொடர்பான வாக்கெடுப்பு 22 ஆம் திகதி அளவில் இடம்பெறும். அதாவது இலங்கையின் பிரேரணையை 47 உறுப்பு நாடுகளில்
ஏதாவது ஒரு நாடு எதிர்க்குமாயின் மட்டுமே அங்கு அது தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படும். ஆனால் உறுப்பு நாடுகள் இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கும் என்பது இதுவரை உறுதியாக அறிவிக்கவில்லை.
ஏற்கனவே இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இந்தியா சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
அதுமட்டுமன்றி பிரதமர் மட்டத்திலும் ஜனாதிபதி மட்டத்திலும் வெளிவிவகார அமைச்சர் மட்டத்திலும் இராஜதந்திர தூதரகங்கள் ஊடாகவும் இலங்கைக்கு ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான பிரசார நடவடிக்கைகளில்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மட்டத்திலும் சர்வதேச நாடுகள் மட்டத்திலும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.