பைடன் அமைக்கும் அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள்!! -விபரங்கள் வெளியானது-
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன், வெளியுறவுத்துறை உட்பட தனது அமைச்சரவையில் இடம்பெற கூடியவர்கள் பெயர்ப்பட்டியலை அறிவித்தார்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.
இதற்கிடையே ஜோ பைடன் தனது தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இந்தவாரம் வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஜோ பைடன் வெளியுறவுத்துறை உள்பட தனது அமைச்சரவையில் இடம்பெற கூடியவர்கள் பெயர்ப்பட்டியலை அறிவித்துள்ளார்.
அதன்படி அன்டனி பிளின்கென் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு தனது மூத்த ஆலோசகர்களில் ஒருவரான ஜாக் சல்லிவன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெர்ரி ஜோ பைடனின் விசேட தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக அலெஜான்ட்ரோ மயோர்காஸ் நியமித்துள்ளார். முன்னாள் துணை சி.ஐ.ஏ. பணிப்பாளரான அவ்ரில் ஹைன்ஸ் தேசிய புலனாய்வு பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.