யாழ். மாநகர சபைக்குத் தெரிவாகிய விஜயகாந்த்துக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை

ஆசிரியர் - Admin
யாழ். மாநகர சபைக்குத் தெரிவாகிய விஜயகாந்த்துக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை

திருட்டு நகைகளை வங்கியில் அடகு வைக்க முற்பட்ட குற்றத்துக்காக, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் உறுப்பினராகத் தெரிவாகியவரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட இருவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அத்துடன், அதே குற்றத்துக்கு மேலும் ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

“குற்றவாளிகள் மூவரும் தலா 7 லட்சம் ரூபா இழப்பீட்டை நகையின் உரிமையாளருக்கு வழங்கவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்று யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.

2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் வங்கியொன்றில் அடகு வைப்பதற்கு சுதர்சிங் விஜயகாந்த் சென்றிருந்தார். அந்த வங்கியில் கடமையாற்றும் அலுவலகரின் திருட்டுப் போன நகைகள் சுதர்சிங் விஜயகாந்திடம் காணப்பட்டன. அதுதொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், விஜயகாந்த் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர். தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் நான்கு பேரும் ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

விஜயகாந்த் உள்ளிட்ட நான்கு பேரும் மீது 116 பவுண் நகைகளைத் திருடியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கோப்பாய் பொலிஸார் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

“சந்தேகநபர்கள் நால்வர் மீதான 2 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன. 4 குற்றவாளிகளுக்குமான தண்டனைத் தீர்ப்பு இன்று மார்ச் 8ஆம் திகதி வழங்கப்படும்” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில் வழக்கு இன்று கூப்பிடப்பட்டது. 3 பேர் நீதிமன்றில் முன்னிலையாகினர். எனினும் ஒரு குற்றவாளி தலைமறைவாகியுள்ளார். அவருக்கு எதிராக நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
தலைமறைவாகிய குற்றவாளிக்கான தண்டனைத் தீர்ப்பு இன்று மன்றினால் அறிவிக்கப்படவில்லை.

விஜயகாந்தின் இந்த நடவடிக்கையால் அவரை தமது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஈ.பி.டி.பி. நீக்கியது. அதனால் அவர் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியை ஆரம்பித்தார். தற்போது அவரது கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அதன் உதயசூரியன் சின்னத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு