பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்..! திணறும் சுகாதார அமைச்சு..
இலங்கையில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் அனைத்திலும் இருந்து தாம் ஒதுங்கிக் கொள்வதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்திருக்கின்றது. சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலொன்று எதிர்வரும் நாட்களில் வௌியிடப்படவுள்ளது.
எனினும், இந்த வர்த்தமானியினுடாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு, தொற்று ஒழிப்புச் செயற்பாடுகளுக்கான உரிய அதிகாரம் வழங்கப்படவில்லையென பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகசங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.
இந்த வர்த்தமானியினூடாக பொது சுகாதார பரிசோதகர்களின் தொழிலுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். COVID-19 ஒழிப்பு தொடர்பில் மக்களுடன் மக்களாக தமது சங்கத்தின் ஊழியர்களே பல்வேறு சவால்களுக்கு மத்தியில் செயற்பட்டதாக
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய சுட்டிக்காட்டினார். அமைச்சினால் வௌியிடப்படவுள்ள வர்த்தமானி தொடர்பில் அதிருப்தி எழுந்துள்ளதால், பணியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.இன்று முதல் COVID-19 தொடர்பான அனைத்து பொறுப்புக்களையும்
அரசாங்கமும் சுகாதார அமைச்சரும் ஏற்றுக்கொள்வார்கள் என தாம் நம்புவதாகவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.