கொரோனா 2ம் அலையா..? மக்களை பீதிக்குள்ளாக்கவேண்டாம், கடுப்பான பிரதமர் மஹிந்த..! மாகாணங்களை முடக்குவதா.. ஏன்..?
கொரோனா 2ம் அலை உருவாகிவிட்டதாக தேர்தல் மேடைகளில் பிரச்சாரம் செய்கிறார்கள். அதனால் மக்கள் பீதியில் உறைந்திருக்கின்றார். நாங்கள் அவர்களிடம் கேட்பது மக்களை பீதிக்குள்ளாக்காதீர்கள். அது இந்த நாட்டிலுள்ள அனைவருடைய பொறுப்புமாகும்.
மேற்கண்டவாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறியிருக்கின்றார். அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது குறித்த விடயம் அங்கு பேசப்படுகையில்,
கேள்வி - கொரோனா தொற்று குறித்த தற்போதைய நிலை என்ன?
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்கவின் பதில்
இதுவரை 2673 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 650 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கந்தகாட்டில் 533 பேர் காணப்படுகின்றனர்.
அவர்கள் அனைவரும் உடல் ரீதியிலும் உள ரீதியிலும் நலமாகக் காணப்படுகின்றனர்.சுகாதார துறையினரும், இராணுவத்தினரும் அவர்களுக்கான சேவையை ஆற்றிவருகின்றனர்.
எவருக்கேனும் சுவாசப் பிரச்சினைகள் காணப்படின் அவர்கள் வெலிகந்த வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவர்.
கேள்வி - சில சில மாகாணங்களை முடக்குவதற்கான அவசியம் உள்ள போதிலும், தேர்தல் காரணமாக, அந்த பிரதேசங்களை முடக்காதிருப்பதாக குற்றச்சாட்டொன்று அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் பதில் நாட்டில் அவ்வாறானதொரு நிலை இல்லை.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க கூறுகையில்
நோயாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பதாக வதந்தியொன்று காணப்படுகிறது. அவ்வாறானதொரு நிலை இல்லை.இருபத்தைந்து பேர் மாத்திரமே வெளியே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதில் குண்டசாலை அதிகாரியின் குடும்ப உறுப்பினர்களும் உள்ளடங்குவர்.சாதாரணமாக ஒரு நபரிலிருந்து 20 பேருக்கு தொற்றலாம் என கணக்கிடப்பட்டு,
அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்வதே நடைபெற்று வருகிறது. அவ்வாறு தனிமைப்படுத்த அழைத்து செல்வதால் இவ்வாறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்வது என்பது அவர்கள் கொவிட் தொற்றாளர்கள் என்து அல்ல.அவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படக்கூடும் என்ற யூகத்திலேயே தனிமைப்படுத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சிலவேளைகளில் தனிமைப்படுத்தலில் இருக்கும் வேளையில் அவர்கள் நோய் தொற்றாளர்கள் என உறுதிபடுத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன.
ஏதேனுமொரு இடத்தில் வைரஸ் பரவல் இடம்பெறுமாயின் நாம் அந்த பரவலை கட்டுப்படுத்தவே பிரதேசமொன்றை முடக்குகின்றோம். சமூக ஊடகங்களிலேயே அதிக தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
கேள்வி - தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் உள்ளவர்கள் சமூகத்தில் இணைக்கப்பட்ட நடவடிக்கை அல்லவா கடந்த தினங்களில் இடம்பெற்றது. இந்த குற்றச்சாட்டுடன் வைத்தியசாலைகளில், தனிமைப்படுத்தல் நிலையங்களில் பணியாற்றுவோர் தொடர்பில் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
இராணுவ தளபதியின் பதில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடு முறையாக இடம்பெறவில்லை என நீங்கள் கூறுவீர்களாயின் அது தவறானதொரு கருத்தாகும்.
முகாம்களிலிருந்து வெளியே சென்றவர்களினால் நோய் தொற்று பரவியதாக இல்லை. புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து வெளியே சென்றவர்களினாலேயே தொற்று பரவியுள்ளது.
முதல் முறையாக கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்திலேயே நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதிலேயே நாம் அறிந்துக் கொண்டோம் ஆரம்பம் கந்தகாடு என்று முகாமுக்குள் இருந்தவர்கள், அதன் ஆலோசகர்கள் விடுமுறையில் சென்றிருந்த அதிகாரிகள் அனைவரையும் முகாமுக்குள் அழைத்து வந்து பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம்.
அத்துடன் முகாமிலிருந்து விடுமுறையில் சென்றவர்களின் குடும்பத்தாரையும் முகாமுக்குள் அழைத்து தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ள விடயம்
14 நாட்களுக்குள் நோய் அறிகுறி வெளிப்படும் என்பதே சாதாரணமாக வைத்திய நிபுணர்களின் எண்ணம். ஆலோசகர்கள் சமூகத்திற்கு சென்று 14 நாட்கள் இதுவரையில் கடந்துள்ளது.
அவர்களது நோய் சமூகத்தில் பரவியிருந்தால் இதுவரை நோயாளர்கள் அடையாளம் காண்பது ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.