ஜேர்மனியில் பயங்கரம்: நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயணிகள் ரயில்கள்!
நேற்று மதியம் உள்ளூர் நேரப்படி 3 மணியளவில் ஜேர்மனி செக் குடியரசுக்கிடையிலான எல்லையில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் பலியானார்கள், 20 பேர் படுகாயமடைந்தார்கள். ஜேர்மன் எல்லையிலுள்ள Nove Hamry மற்றும் Pernink ரயில் நிலையங்களுக்கிடையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மோதிக்கொண்ட இரண்டு ரயில்களுமே செக் குடியரசிலுள்ள Karlovy Vary நகர் மற்றும் ஜேர்மன் நகரமான Johanngeorgenstadt ஆகிய நகரங்களுக்கிடையில் பயணிக்கும் ரயில்களாகும். ஜேர்மனியிலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உதவிக்குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 30ஐத் தொடலாம் என மீட்புக் குழு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து அறிவதற்காக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.