வெள்ளைக்கொடியுடன் யாரும் சரணடையவில்லை! - மாவைக்கு இராணுவத் தளபதி பதில்

ஆசிரியர் - Admin
வெள்ளைக்கொடியுடன் யாரும் சரணடையவில்லை! - மாவைக்கு இராணுவத் தளபதி பதில்

போரின் முடிவில், விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் எவரும் வெள்ளைக் கொடிகளுடன் சரணடையவில்லை என்றும், புலிகள் இயக்க உறுப்பினர்கள் எவரும் உறவினர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இறுதிப் போர்க்களத்தில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் அனைவரும் புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், மாவை சேனாதிராஜா நேற்றுமுன்தினம் வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பாக பதிலளிக்கும் போதே, இராணுவத் தளபதி இவ்வாறு கூறியிருந்தார்.

அரச தரப்பின் உத்தரவாதத்துக்கு அமைய விடுதலைப்புலிப் போராளிகள் பலர் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்தனர் என்றும், பலர், உறவினர்களால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டனர் என்றும், அந்த அறிக்கையில் கூறியிருந்த மாவை சேனாதிராஜா, அவ்வாறு சரணடைந்தவர்கள் தற்போது இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு இராணுவத் தளபதி பொறுப்புடன் பதிலளிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, இறுதிப்போரில் வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்கள் என்றோ, , உறவினர்களினால் ஒப்படைக்கப்பட்டவர்கள் என்றோ, காணாமல்போனவர்கள் என்றோ எவரும் இல்லை என்று கூறியுள்ளார்.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அனைத்து விடுதலைப்புலிகள் உறுப்பினர்களும் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டு விட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்கள் என்று கூறப்படுவோர் போர்க்களத்தில் உயிரிழந்திருப்பார்கள் எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்பில்லாமல் - இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என்றும் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு