ஒரே நேரத்தில் 2000- 3000 படையினர் கொல்லப்பட்டனரா..? 1200 பேர் கொல்லப்பட்டதே பதிவு. நம் ஆட்சியில் கருணாவுக்கு கவனிப்பு உண்டு..
ஒரு இரவில் 2000 தொடக்கம் 3000 படையினரை கொன்றதாக கருணா கூறியது பொய் என கூறியிருக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முல்லைத்தீவில் விடுதலை புலிகளிடம் சிக்கிய 1200 படையினர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டனர் எனவும், 1990ம் ஆண்டு 600 பொலிஸார் புலிகளால் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
பி.பி.சி தமிழ் சேவைக்கு வழங்கியிருக்கும் செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கருணா கூறுவதுபோல் 2000 - 3000 வரையான படையினர் ஒரே இரவில் கொல்லப்படவில்லை. எவ்வாறாயினும், முல்லைத்தீவு பகுதியில்
நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகள் வசம் சிக்கிய 1200 இராணுவத்தினர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 1990ம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் நிராயுதபாணிகளாக சிக்குண்ட 600 பொலிஸார் விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டனர்.
இலங்கை வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிகளவான பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவமும் இதுவாகும். தாம் படையினரை கொன்றதாக தெரிவிக்கும் கருணா, ஒரு பயங்கரவாதியாகவே இதனை செய்துள்ளார். ஆகையினால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனினும், ராஜபக்ச குடும்பத்தினர் கருணாவை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்ச ஆட்சியில் கருணா எப்போதும் தண்டிக்கப்பட மாட்டார் என்பதே உண்மை. எனினும், தமது அரசாங்கமொன்று ஆட்சிக்கு வரும் பட்சத்தில், நிச்சயமாக கருணா மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
என சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.