உத்தேச மின் கட்டண பட்டியலை நிறுத்தி! வீடுகளுக்கு வந்து மின் வாசிப்பைப் பெற அங்கஜன் நடவடிக்கை
இலங்கை மின்சார சபையின் உத்தேச மின் கட்டண பட்டியலை நிறுத்தி வீடுகளுக்கு வந்து மின் வாசிப்பைப் பெற அங்கஜன் நடவடிக்கை
இலங்கை மின்சார சபையினால் அனுப்பப்படும் உத்தேச மின் வாசிப்பு பட்டியல் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்த தேவையில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்
கொரோணா காலப் பகுதியில் மின் வாசிப்பு கட்டணத்திற்காக இலங்கை மின்சார சபை கடந்தகால பட்டியல் தொகையை அடிப்படையாக வைத்து உத்தேச மின் பற்றுச் சீட்டை பாவனையாளர்களுக்கு வழங்கினர்.
இக் குறித்த நடைமுறை மூலம் யாழ் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதோடு அதனை முழுமையாகச் செலுத்த இயலாத நிலையில் பலர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்
குறித்த விடயம் தொடர்பில் அங்கஜன் இராமநாதனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சர் மாண்புமிகு மஹிந்த அமரவீர அவர்களிடம் குறித்த விடயம் தொடர்பாக தொலைபேசி மூலம் நேரடியாக உரையாடினார்.
அதாவது கொரோணா காலப் பகுதியில் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இன்னும் அவர்கள் தங்களுடைய இயல்பான வாழ்க்கை, தொழில்களில் ஈடுபட முடியாத நிலையில் வாழ்க்கையை நடாத்தி வருகின்றனர் என அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்
இந்நிலையில் இலங்கை மின்சார சபையினால் ஒரே தடவையில் வழங்கும் மின் பட்டியலை நிறுத்துமாறும் மின் வாசிப்பு கட்டணம் தொடர்பில் பாவனையாளர்களின் வீடுகளுக்கு சென்று அந்தந்த மாதத்திற்கு மின் வாசிப்பு அலகுகளை கணக்கிடுமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்
இதனையடுத்து அமைச்சர் அமரவீர மக்களின் குறித்த பிரச்சினை தொடர்பில் தானும் அறிவதாகவும் தாங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க உத்தேச மின் வாசிப்புப் பட்டியலை நிறுத்துமாறு இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக தெரிவித்தார்
அத்தோடு செலுத்தப்படாத மாதங்களுக்கான மின் பட்டியல் கொடுப்பனவுகளுக்கு ஜனாதிபதி பிரதமருடன் கலந்துரையாடி மானியம் மற்றும் கால அவகாசத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.