SuperTopAds

காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை! - இராணுவத் தளபதி

ஆசிரியர் - Admin
காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை! - இராணுவத் தளபதி

இறுதிப் போரின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள், புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களில் இல்லையென்றால், அவர்கள் போரில் இறந்து விட்டனர் என்று, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவரும். இல்லை என்று குறிப்பிட்ட இராணுவத் தளபதி, போர்க் காலகட்டத்தில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப் புலிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி சமூகத்தில் இணைத்திருப்பதாகவும் கூறினார்.

விடுதலைப் புலிகள் தமது உறுப்பினர்கள் பலரை கொன்று அவர்களின் உடல்களை மறைத்தனர் என்றும், அவ்வாறு மறைத்த உடல்களை எம்மால் எவ்வாறு கண்டறிய முடியும்? என்றும் சவேந்திர சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

காணாமல் போனவர்கள் என கூறப்படுபவர்கள், அந்த பட்டியலில் இருக்கலாம் என்றும், அவர் கூறினார்.

போரில் எமக்கு எதிராக போராடியவர்கள் கொல்லப்பட்டனர் என்றும், சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ள இராணுவத் தளபதி, விடுவிக்கப்பட்டவர்களில் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் அல்லது தேடப்படும் நபர்கள் இல்லை என்றால், அந்த நபர்கள் இறந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.