2015 ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்தன! - மகிந்த குற்றச்சாட்டு.
2015 ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்தன என்று, பிரதமர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று, இலங்கைக்கு எதிரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சூழ்ச்சிகளை தோற்கடித்தல் என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய போதே, பிரதமர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.
“1970 இல் இலங்கையில் சோசலிச அரசாங்கம் உருவான போது, ரஷ்ய, சீன தலையீட்டினால், அது இடம்பெற்றது என எவரும் கூறவில்லை , 1977 இல் முதலாளித்துவ ஆட்சி உருவானபோது, எவரும் அமெரிக்கா, பிரிட்டன் பின்னணியில் உருவானதாக எவரும் கூறவில்லை. எனினும் 2015 ஜனாதிபதி தேர்தலில், முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு, வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்தன.
2009இல் போரில் வெற்றிபெற்ற பின்னர் சில வெளிநாடுகள் முன்னர் ஒருபோதும் இல்லாதளவிற்கு, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்தன. நாங்கள் யுத்தத்தில் வெற்றி பெறுவோம் என அவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலேயே, அவர்கள் தலையிட ஆரம்பித்து விட்டனர், ஆனால் அப்போது, நாட்டு மக்கள் அதனை தெளிவாக முறியடித்தனர் , எனினும், இந்த சதிமுயற்சி 2015 வரை தொடர்ந்தது, பொதுவேட்பாளருக்காக விலகி நிற்குமாறு ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரை கேட்டுக் கொண்டது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.
2015இல் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர்,நாடு பகைச் சக்தியொன்றின் பிடியில் சிக்குண்டது போன்ற நிலை காணப்பட்டது . அவர்கள் திட்டமிட்ட அடிப்படையில் நாட்டின் தேசிய அரசியல் முகாமை துன்புறுத்தினர் , எப்போதும் நாட்டை பாதுகாப்பதில் முன்னணியில் நின்ற பௌத்த மகா சங்கத்தினரை அச்சுறுத்துவதற்காக, முக்கியமான பௌத்த தலைவர்களை போலி குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைத்தனர் .
பௌத்தர்களின் பெரஹர பாரம்பரியத்தினை முடிவிற்கு கொண்டு வருவதற்காக அவர்கள் ஆலயங்களில் உள்ள யானைகளை இலக்கு வைத்தனர் .
பயங்கரவாதிகளை தோற்கடித்து தேசத்தின் பிரதேச ஒருமைப்பாட்டை உறுதிசெய்த படையினரின் மனோநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தி, அவர்களை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அவர்கள் யுத்த வெற்றி வீரர்கள் இல்லை திருடர்கள், குற்றவாளிகள் என்ற எண்ணத்தை மக்களின் மனதில் உருவாக்கவும் வெளிநாடுகளுக்கு காண்பிக்கவும் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றன.
இந்த நாட்டில் உள்ள தேசியவாத முகாமை முற்றிலுமாக அழித்து, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையின் பிளவுக்கு வழி செய்யும் நோக்கத்துடனேயே இவை அனைத்தும் செய்யப்பட்டன என்றும், அவர் குற்றம்சாட்டியுள்ளார்.