கூகுளும் – ஆப்பிளும் முதல் முறையாக இணைந்தனர் எதற்காக தெரியுமா?

கொரோனா வைரஸ் தொடர்பாளர்களை கண்டறியும் வகையில், போட்டியாளர்களான கூகுளும் – ஆப்பிளும் முதல் முறையாக இணைந்து புதிய மொபைல் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இது குறித்து ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகெங்கிலும், அரசாங்கங்களும், சுகாதார அதிகாரிகளும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு தீர்வு காணவும், சமுதாயத்தை மீண்டும் இயங்கவும் பணியாற்றி வருகிறார்கள்.
அந்த வகையில், கூகுள் மற்றும் ஆப்பிளின் கூட்டு முயற்சியில், புளூடூத் தொழில்நுட்பத்தை இயக்கி, அதன் மூலம் வைரஸை தடுக்க அரசாங்கங்களுக்கும் சுகாதார நிறுவனங்களுக்கும், உதவுகிறோம்.
கொரோனா வைரஸ், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அருகில் உள்ளவர்களுக்கும் பரவும் என்பதால், அதன் தடத்தை கண்டறிந்தால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.
இதற்கான விரிவான தீர்வாக ஆப்பிளும் கூகுளும் இணைந்து, அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டெர்பேஸ் மற்றும் இயங்குதள அளவிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளோம்” என்றது.
இந்த வசதி ஸ்மார்ட்போன் இயங்குதளம் மூலம் நேரடியாக இயங்குகிறது. இதற்கென தனி செயலியை பதிவிறக்க தேவையில்லை. சிஸ்டம் அப்டேட் செய்தால் போதும்.
ஒரு உதாரணம் மூலம் இவற்றை விளக்கியுள்ளனர். இரண்டு பேர் ஒரு இடத்தில் சில நிமிடங்கள் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது, பின்னணியில் இயங்கும் ப்ளூடூத், அவர்கள் தொடர்பில் இருந்ததாக ஸ்மார்ட்போனுக்கு தகவல் அனுப்பிவிடும்.
அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர் அரசின் செயலியில் பதிவு செய்ய வேண்டும்.
பின்னர் நம் அனுமதி கேட்கும், நாம் அனுமதித்தால், நம்முடன் நெருக்கமான வட்டத்தில் இருந்த நபர்களின் மொபைல் போன் விவரங்களை அனுப்பி வைக்கும். இத்தகவல்கள் தற்காலிகமாக 14 நாட்களுக்கு கணிணி சர்வரில் பதிவேற்றப்பட்டிருக்கும்.
அதே சமயம், எதிர்தரப்பில் தொடர்பில் இருந்தவர்களின் ஸ்மார்ட்போன், தொடர்சியாக இந்த சர்வர் குறிப்புகளை கண்காணித்து, நாம் தொடர்பு கொண்ட யாருக்காவது கொரோனா இருந்தால் உடனே தெரியப்படுத்தும். தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தும்.
ஆப்பிள் மற்றும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை 300 கோடி மக்கள் உலகம் முழுவதும் பயன்படுத்துகிறார்கள் என்பதால், இது மிகுந்த பலனளிக்கும் என நம்பப்படுகிறது.
இரண்டாம் கட்ட கொரோனா பரவலில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்கள் ஆரோக்கிய சேது செயலி மற்றும் கூகுள், ஆப்பிள் ஸ்மார்ட்போன்களின் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்க முடியும். நோய் பரவலை பெருமளவு தடுக்க முடியும்.