தேசியக்கொடி பிரதிபலிக்கும் மக்களை உதாசீனம் செய்யக் கூடாது.

ஆசிரியர் - Editor I
தேசியக்கொடி பிரதிபலிக்கும் மக்களை உதாசீனம் செய்யக் கூடாது.

தேசியக் கொடி என்பது ஒரு நாட்டின் மக்களை அடையாளப்படுத்துகின்றது. மக்களுள் முரண்பாடுகள் இருக்கலாம். கட்சிகளுள் வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் அதை வைத்துத் தேசியக்கொடி பிரதிபலிக்கும் மக்களை உதாசீனம் செய்யக் கூடாது. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஷ்வ ரன் வவுனியாவில் உள்ள பாடசாலை நிகழ் வு ஒன்றில் தேசிய கொடியை ஏற்ற மறுத்த மை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்க ண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

அமைச்சர் சர்வேஷ்வரனின் ஆதங்கம் எனக்கும் இருந்து வந்துள்ளது. றோயல்க் கல்லூரியின் சிரேஷ்ட போர்ப் பயிற்சிப் பள்ளி மாணவன் (உயனநவ ) என்ற முறையில் 1959ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டதன் பின்னர் எந்த ஒரு சுதந்திர விழாவிலும் நான் கலந்து கொள்ளவில்லை. நீதியரசராக இருந்த போது அழைப்பிதழ் கிடைத்தும் நான் கலந்து கொள்ளவில்லை. பிரதம நீதியரசர் சர்வானந்தா அவர்கள் வலிந்து என்னை அழைத்த போதும் நான் பங்குபற்றவில்லை. காரணம் ஆங்கிலேயரிடமிருந்து நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தாலும் சிங்கள ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் இதுவரை எமக்குக் கிடைக்கவில்லை. சென்ற வருடம் பெப்ரவரி மாதத்தில் சிங்கள மக்களின் நல்லெண்ணத்தைப் பெறும் வகையில் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள கௌரவ இரா.சம்பந்தன் முடிவெடுத்த போது அவருடன் அதில் கலந்து கொள்ள நான் முன்வரவில்லை. எனவே தான் எனது எதிர்ப்பை அவ்வாறு நான் காட்டி வந்துள்ளேன்.

எனினும் இலங்கை மக்கள் அனைவரையும் மதிக்கும் விதத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி வருகின்றேன். தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தி வருகின்றேன். இப்பொழுது தேசிய கீதம் தமிழிலேயே வடமாகாணத்தில் பாடப்படுகிறது.

ஆகவே கௌரவ சர்வேஸ்வரனின் ஆதங்கம் ஒரு விதத்தில் வெளிவந்துள்ளது. எனது ஆதங்கம் இன்னொரு விதத்தில் வந்து கொண்டிருக்கின்றது. அவரின் உணர்ச்சிகளை நான் புரிந்துள்ளேன், மதிக்கின்றேன். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் புறக்கணிப்பது எமது மக்கள் யாவரையும் புறக்கணிப்பது போலாகும். எமது மன வேதனையை அவ்வாறான புறக்கணிப்பால் எடுத்துக் காட்டாமல் விட்டிருக்கலாம் என்பதே என் கருத்து. தேசியக் கொடி பௌத்தத்திற்கும் பேரினத்திற்கும் மிகக் கூடிய முக்கியத்துவம் அளித்து இந் நாட்டின் முதல்க் குடியான தமிழர்களுக்கும் முதல் மதமான சைவத்திற்கும் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் அந்தப் பிழையை தேசியக் கொடியையோ தேசிய கீதத்தையோ உதாசீனம் செய்து வெளிக்காட்டாது வேறு வழிகளில் காட்டியிருக்கலாம் என்பதே எனது கருத்து.

ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தேசியக் கொடியை எரிப்பதை ஒரு ஜனநாயக உரித்து என்றே பார்க்கின்றார்கள். அதைக் குற்றம் என்று கண்டு அவ்வாறு செய்வோரை அவர்கள் சிறைப்படுத்துவதில்லை.

எனவே தனது எதிர்ப்பை இவ்வாறு காட்டாமல் வேறு வழிகளில் எதிர்காலத்தில் காட்டுமாறு கௌரவ சர்வேஸ்வரனிடம் கோரிக்கை விடுவனே தவிர அவருக்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதே என் கருத்து. தமிழ் மக்களின் மன வேதனையை சிங்களப் பெரும்பான்மை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில், தேசியக் கொடியை நிராகரித்த வடக்கு மாகாணத்திற்கு அதிகாரங்களை எப்படி வழங்குவது என்று கேட்டுள்ளார். தவறுகளைத் தம்வசம் வைத்துக் கொண்டு இவ்வாறான கேள்விகளை சிங்கள அரசியல் வாதிகள் கேட்கக் கூடாது. அவரின் தவறுகளை அவருக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் எனக்குள்ளது.

முதலாவது சிங்கள அரசியல் வாதிகளே எமக்கு அதிகாரங்கள் வழங்க உரித்துடையவர்கள் என்று அப் பாராளுமன்ற உறுப்பினர் நினைப்பது தவறானது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்துள்ளதானால் சிங்கள அரசியல்த் தலைவர்கள் ஆங்கிலேயரையும் தமிழ்ப் பேசும் மக்களையும் ஏமாற்றிப் பெற்றுக் கொண்ட சலுகைகளை அவர்கள் அடாவடித்தனமாகப் பாவித்து வந்தமையே காரணம். பெரும்பான்மை இனத்தவர் என்பதால் மற்றையோரை வேறுபடுத்தி, தம் மக்களுக்குப் பக்கச் சார்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று சட்டம் எதிர்பார்க்கவில்லை. சுவிட்சர்லாந்தில் சிறுபான்மையினருக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்குகின்றார்கள். ஆனால் இங்கோ எம்மைப் புறக்கணிக்கின்றார்கள். சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து தமது எதிர்ப்பை வன்முறையற்ற முறையில் எடுத்துக்காட்டிய தமிழ்த் தலைவர்களை பேரை (டீநசைய டுயமந) ஏரிக்குள் தூக்கி எறிந்தமை அடாவடித்தனமே. போர்முடிந்தும் இராணுவத்தை வட கிழக்கு மாகாணங்களில் இன்றும் நிலைபெறச் செய்துள்ளமை அடாவடித்தனமே. செய்வதையுஞ் செய்துவிட்டு எம் மீது பிழையைப் போடப் பார்க்கின்றார் கௌரவ உறுப்பினர்.

இரண்டாவதாக அவர் மனதில் இருத்த வேண்டியது எவருந் தமது எதிர்ப்பை அஹம்சா முறையில் எடுத்துக் காட்டலாம் என்பதை. சிங்களப் பெரும்பான்மையினம் விட்ட தவறுகளே எம் எதிர்ப்பை நாம் காட்ட வைத்ததேயொழிய எதிர்ப்பைக் காட்டினால் அதிகாரங்கள் வழங்க மாட்டோம் என்று மிரட்டுவது அவர்களின் அடாவடித்தனத்தின் மற்றொரு வெளிப்பாடு.

மூன்றாவது அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது சட்ட ரீதியாகவே அல்லாது அடாவடித்தனம் செய்பவரின் அந்தரங்க எண்ணங்களின் அடிப்படையில் அன்று.

நான்காவது போர் முடிந்து எட்டு வருடங்களாகியும் இராணுவத்தினரை வட கிழக்கு மாகாணங்களில் நிலை கொள்ளச் செய்த பின்னரே கௌரவ உறுப்பினர் இவ்வாறு கூறுகின்றார். எப்படியுந் தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் இருந்து கொண்டுதான் அவர் அதிகாரம் வழங்குவது எவ்வாறு என்று கேட்கின்றார்.

முதலில் தேசியக் கொடியை நிராகரித்தவரின் மனோநிலையை அவர் புரிந்து கொள்ளட்டும். அவருக்கு அந்த மனோநிலையை வருவித்தவர்கள் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் உறவின அரசியல் வாதிகளே என்பதை உணர்ந்து கொள்ளட்டும். இறுதியாக அவரோ அவரின் கூட்டமோ எமக்கு அதிகாரங்களை வழங்குவது என்பது அடாவடித்தனத்தின் உச்ச வெளிப்பாடு என்பதை அவர் புரிந்து கொள்ளட்டும்!

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு