வட, - கிழக்கில் பௌத்த விகாரைகளால் எந்தப் பிரச்சினையும் இல்லை – த.தே.கூ எம்.பி சிவமோகன்

ஆசிரியர் - Admin
வட, - கிழக்கில் பௌத்த விகாரைகளால் எந்தப் பிரச்சினையும் இல்லை – த.தே.கூ எம்.பி சிவமோகன்

வடக்கு- கிழக்கில் வணக்கத்திற்காகவே பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளனவே தவிர வேறு நோக்கம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன். 

இந்த புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டமைக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (07) வியாழக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின் போதே சிவமோகன் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகிறது என்பது மத ரீதியாக அரசியலுக்காக பாவிக்கப்படும் விடயம் எனத்தான் நான் பார்க்கின்றேன். வெளிப்படையாக தமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த விகாரை பொது மக்களின் இடங்களில் கட்டப்பட்டிருக்கின்றதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். 

மாங்குளத்தில் ஒன்று உண்டு. அதுவும் முகாம்களின் உள்ளே தான் உள்ளது. ஏனைய இடங்களில் கட்டப்பட்ட விகாரைகள் அனைத்தும் முழுமையாக முகாம்களின் உள்ளே தான் உள்ளது. அவை வணக்கத்திற்காகவே கட்டப்பட்டது. அவை மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் கட்டப்பட்டவை. அவர்கள் தங்களுடைய வணக்கத்திற்காக அவற்றை கட்டியுள்ளார்கள் என்பது உண்மை தான். 

அதேநேரம், இன்று அனுராதபுரத்தை எடுத்துக்கொண்டால், எமக்கு அங்கு சைவக் கோவில் இருக்கிறது. தென்பகுதியை எடுத்தால் எங்கு போனாலும் அங்கு கோவில் இருக்கிறது. பதுளையில் உள்ள மலை ஒன்றில் எங்களுக்கான வணக்க கோவில் இருக்கிறது. சைவ மக்களுக்கான கோவில்களும் கொழும்பில் பரவலாக இருக்கிறது. 

பௌத்த பிக்குகள் ஆன்மீகத்தை போதித்தால் பிரச்சினை இல்லை. ஆனால் இன்று அரசியலில் இறங்கியுள்ளமையால் தான் பிரச்சனை.

தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனவளப் பிரிவு, மகாவலி அபிவிருத்தி, இராணுவம் இந்த 5 பிரிவுகளும் தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் திணைக்களங்கள் என்பது உண்மை. இங்கு இருக்கும் அதிகாரிகள் அனைவரும் சிங்களவர்களாவே இருக்கிறார்கள்.

நீராவியடி விவகாரம் மஹிந்த ராஜபக்சவின் 52 நாள் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றது. இதற்கு சஜித் பிரேமதாச காரணமல்ல. தற்போது ஓமந்தை மாளிகைப் பகுதியில் தொல்பொருள் திணைக்களம் பிரச்சினை எடுக்கும் போது சஜித் பிரேமதாச ஒரு வேட்பாளர். அவர் தலையிடவில்லை. 

வெடுக்குநாறி ஆலய பிரச்சினைக்கு பொலிசாரே காரணம். சஜித் பிரேமதாச அல்ல. சஜித் பிரேமதாச அவர்கள் வட்டுவாகல் வந்த போது ஒரு கோரிக்யை முன்வைத்தோம். நந்திகடலை ஆழப்படுத்த நிதி வந்துள்ள போதும் வனஜீவராசிகள் திணைக்களம் அனுமதி தரவில்லை. இதை தீர்த்து வைக்குமதாறு கோரினேன். 

அதற்கு அவர், நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த பின்னர் ஆழப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறினார். – எனத் தெரிவித்தார். 

இதேவேளை, சிவமோகன் எம்.பி சஜித் பிரேமதாச அணியிடம் கோடிக்கணக்கான ரூபா நிதியைப் பெற்றுக்கொண்டுள்ளார் எனவும் இதனாலேயே இவ்வாறு கருத்துக் கூறுகின்றார் எனவும் வன்னி மக்கள் தெரிவித்துள்ளனர். 

சிவமோகனின் இந்தக் கருத்துக்களுக்கு அவர்கள் கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர். 

Radio
×