இரண்டு கோடி விவகாரம்: சிறீதரன், மாவை சேனாதிராஜாவுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கடும் சாட்டையடி (VIDEO)

ஆசிரியர் - Admin
இரண்டு கோடி விவகாரம்: சிறீதரன், மாவை சேனாதிராஜாவுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கடும் சாட்டையடி (VIDEO)


நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இலஞ்சம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படும்  குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள் எனச் சவால் விட்டாலும் கூட இது தொடர்பில் பாராளுமன்றத்தில் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்துக்கள் காணொளியாகவும், பதிவாகவும் உள்ளன. 

சிவசக்தி ஆனந்தன் இவ்வாறானதொரு குற்றச்சாட்டைத் தவறாக முன் வைத்துள்ளார் எனில் நீங்கள் ஏன் பாராளுமன்றத்தில் அதனை மறுக்கவில்லை? தற்போது தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜாவும், சிறீதரனும் இது இலஞ்சம் கிடையாது. அபிவிருத்திக்காக மேலதிகமாக ஒதுக்கப்பட்ட பணம் எனக் கூறுகின்றனர். 

ஏற்கனவே எமது நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் கருத்துக்களுக்குப் பதில் சொல்லியிருக்கின்றார் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கடும் சாட்டையடி கொடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ள 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குவதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு கோடி ரூபா பணம் வழங்கப்பட்டதான குற்றச்சாட்டை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முன்வைத்துள்ள நிலையில் தமிழர் அரசியலில் குறித்த விவகாரம் அண்மைக் காலமாக முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. 

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை(23) பிற்பகல் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்மையில் இவ்வாறான நிதியானது அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட பணமெனில் அது 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சிவசக்தி ஆனந்தன் தவிர்ந்த 15 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமே குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறெனில், அரசாங்கம் தன்னுடைய தேவை கருதி தமக்கு ஆதரவாகத் தொடர்ந்தும் 15 பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட வேண்டுமென்ற அடிப்படையிலேயே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என்பதே யதார்த்தமான விடயம்.

அரசாங்கத்தின் சில தேவைகளை நிறைவு செய்வதை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான நிதி வழங்கப்பட்டுள்ளது.  இதன் அடிப்படையில் நோக்கினால் இதுவொரு இலஞ்சமாகவே காணப்படுகிறது.

இத்தகைய நிலையில் அவ்வாறானதொரு விடயமே இடம்பெறவில்லை எனத் தேர்தல் காலமான தற்போது கூட்டமைப்பினர் தெரிவித்து வரும் கருத்துக்கள் முற்றுமுழுதாக உண்மையை மூடி மறைக்குமொரு செயற்பாடு.

மாவை சேனாதிராஜா நிதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை மறுக்கவில்லை. அந்த நிதியின் அடிப்படையில் எவ்வாறான வேலைகளைத் தான் மேற்கொண்டுள்ளார் என்பதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால், அது இலஞ்சமில்லை என்றே கூறுகின்றார்.

எனவே, நிதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமையை  அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அந்த நிதி எவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பது தான் இங்கு கேள்வியாகவுள்ளது எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு