SuperTopAds

லண்டன் வீதிகளில் ஒலித்த மோதிக்கு எதிரான கோஷம்

ஆசிரியர் - Editor II
லண்டன் வீதிகளில் ஒலித்த மோதிக்கு எதிரான கோஷம்

இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையைக் கண்டித்து, பிரிட்டன் தலைநகர் லண்டனில் நூற்றுக்கணக்கான தெற்காசிய சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மழைக்கும், குளிருக்கும் மத்தியில் லண்டன் மற்றும் பிற நகரங்களில் இருந்து வந்தவர்கள் போராட்டம் செய்தனர்.

நாடாளுமன்ற சதுக்கத்தில் கூடியவர்கள், அங்கிருந்து இந்திய தூதரகம் வரை நடந்து சென்றனர்.

பிரிட்டனில் வாழும் பல சாதி குழுக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற தெற்காசிய சமூகத்தினரும் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

மோதி அரசு வீழ்க.. ஆர்.எஸ்.எஸ் வீழ்க'' என்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

''இந்தியாவில் தலித்துகள், முஸ்லிம்கள், மற்ற சிறுபான்மை சமூகத்தினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை, உலகம் முழுக்க வாழ்பவர்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என தகவலை மோதி அரசுக்கு அனுப்ப வேண்டியது முக்கியம் என நான் நினைக்கிறேன்'' என்கிறார் இந்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களின் ஒருவரான கல்பனா வில்சன்.

இந்தியாவில் ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளது என்பதை மக்களிடம் நாங்கள் சொல்ல வேண்டும்'' எனவும் அவர் கூறுகிறார்.

''மஹாராஷ்டிரா பீமா கோரேகானில் நடந்த சம்பவம், போராட்டக்காரர்களை இங்கு கூட வைத்தது. இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது மக்கள் தங்கள் குரலை எழுப்ப வேண்டியது முக்கியமானது'' என்கிறார் போராட்டத்தில் கலந்துகொண்ட சந்தீப்.

1817-ம் ஆண்டு பேஷ்வா ராணுவத்திற்கு எதிரான சண்டையில் இறந்த தலித்துக்களுக்கு அஞ்சலி செலுத்த ஒவ்வொரு ஆண்டும் பெரும் எண்ணிக்கையிலான தலித்துக்கள் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீமா கோரேகானுக்கு செல்வர்கள். இந்த அண்டு அங்கு சென்ற தலித்துக்கள் மீது வலதுசாரி குழுக்கள் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் ஒருவர் பலியானார்.

''200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாதிய பாகுபாடு இன்னும் தொடர்கிறது. இதற்கு எதிராக நாம் கட்டாயம் நிற்க வேண்டும்'' என்கிறார் சந்தீப்.

இந்திய தூதரகம் முன்பு கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், இந்திய தூதர் வெளியே வந்து தங்களிடம் பேச வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

''எங்கள் கோரிக்கை மனுவை, இந்திய தூதரிடம் அளிக்க முயற்சித்தோம். ஆனால், இதனை ஏற்றுக்கொள்ள அவர்கள் மறுத்துவிட்டனர். மனுவை ஏற்க வேண்டாம் என இந்திய அரசிடம் இருந்து தங்களுக்கு அறிவுறுத்தல்கள் வந்ததாகக் கூறினர்'' என்கிறார் அம்ரித் வில்சன் எனும் மற்றொரு போராட்டக்காரர்.