வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று மிக பக்திபூர்வமாக இடம்பெற்றது.

ஆசிரியர் - Admin
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று மிக பக்திபூர்வமாக இடம்பெற்றது.

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை(10) காலை சிறப்பாக இடம்பெற்றது.

காலை-07.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பட்டாடைகள் ஜொலி ஜொலிக்க அலங்கார நாயகியாக துர்க்காதேவி மெல்ல மெல்ல அசைந்தாடி உள்வீதி வலம் வந்தாள்.

அதனைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷத்தின் மத்தியில் அம்பாள் திருத்தேரில் ஆரோகணித்தார். தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தேர்த் திருவிழா சிறப்புரை ஆற்றியதைத் தொடர்ந்து தடையின்றித் திருத்தேர் பவனி வரும் வகையில் சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு ஓதப்பட்டது.

விசேட தீபாராதனைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் புடைசூழ, அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க காலை-09.30 மணியளவில் திருத்தேர் பவனி ஆரம்பமாகியது.

ஆண் அடியவர்கள் ஒருபுறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் திருத்தேரின் வடம் தொட்டிழுக்க அம்பாள் திருத்தேரில் பவனி வந்த காட்சி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அழகுத் திருக்காட்சி.

அம்பாள் திருத்தேரில் பவனி வந்த போது பல நூற்றுக்கணக்கான ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணை எடுத்தும், பெண் அடியவர்கள் அடியளித்தும், பாற்காவடிகள் எடுத்தும் நேர்த்திக்கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர். அத்துடன் திருத்தேரின் பின்பாக அடியவர்கள் பலரும் அம்பாள் பஜனைப் பாடல்களைப் பண்ணுடன் ஓதியவாறு வலம் வந்தனர்.

திருத்தேர் பவனி வந்த போது பல அடியவர்கள் அழுதும் தொழுதும் துர்க்காதேவியை மெய்யுருக வழிபட்டனர். திருத்தேர் பவனி முற்பகல்-10.30 மணியளவில் மீண்டும் இருப்பிடத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.

திருத்தேர் பவனி வரும் வேளையில் தேவஸ்தான திருமுறை மடத்தில் யாழ்.குடாநாட்டின் புகழ்பூத்த வித்துவான்கள் மற்றும் ஓதுவார்களின் திருமுறை இசைக்கச்சேரி சிறப்புற இடம்பெற்றது.

தேர்த்திருவிழாவை முன்னிட்டு யாழ்.குடாநாட்டின் பல பாகங்களிலிருந்தும் பறவைக்காவடிகள், தூக்குக் காவடிகள் எடுத்தும் பல எண்ணிக்கையான ஆண் அடியவர்கள் தொடர்ந்தும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்ற காட்சி பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாய் அமைந்துள்ளது.

இவ்வாலயத் தேர்த் திருவிழாவில் யாழ்.குடாநாட்டின் பல பாகங்களிலிருந்து மாத்திரமல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்தும், புலம்பெயர் தேசங்களிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டுள்ளனர்.

தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டுள்ள அடியவர்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் சாரணர்கள், ஆலயத் தொண்டர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் தேர்த்திருவிழாவுக்கு வருகை தந்துள்ள அடியவர்களின் நன்மை கருதி தேவஸ்தான அன்னதான மண்டபத்தில் அன்னதான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் கடும் வெயிலுக்கு மத்தியில் களைப்புடன் செல்லும் அடியவர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் ஆலயச் சூழலிலும், ஆலயத்திற்குச் செல்லும் வீதிகள் தோறும் தாகசாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுப் பானங்கள் பரிமாறப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு