பலாலி விமான தளம் தெரியாமல் விமானி கலக்கம்! செய்தியை மறுத்துள்ள விமானப்படையினர்

ஆசிரியர் - Editor II
பலாலி விமான தளம் தெரியாமல் விமானி கலக்கம்! செய்தியை மறுத்துள்ள விமானப்படையினர்

அமைச்சர் மஹிந்த அமரவீரவை விமானம் மூலம் விமானப்படையினர் பலாலிக்கு அழைத்துச் சென்றதாகவும் விமானப்படையினருக்கு பலாலி நோக்கிய பயணப் பாதையில் தெளிவு இருக்கவில்லயென்றும் பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியை விமானப் படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் ஜிஹான் செனவிரட்ன முற்றாக மறுத்துள்ளார்.

குரூப் கெப்டன் ஜிஹான் செனவிரட்ன இது தொடர்பில் தெரிவித்ததாவது- பத்திரிகை ஒன்றில் நேற்று அதாவது ஜனவரி 15 ஆம் திகதி வெளிவந்த செய்தி முற்றிலும் தவறானதாகும்.

குறிப்பிட்ட திகதியன்று விமானப்படைக்குச் சொந்தமான எந்தவொரு விமானமும் பலாலிக்குச் செல்லவில்லை. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறிக்கைக்கு அமைய சிவில் விமானமொன்றின் மூலமே அமைச்சர் பலாலிக்குச் சென்றுள்ளார்.

அத்துடன் விமானப்படையினர் வடக்கு நோக்கி பயணிப்பதில் அதிக அனுபவம் கொண்டவர்கள். இவர்களுக்கு பலாலி நோக்கிச் செல்வதற்கான பயணப்பாதையில் தெளிவில்லை என்ற செய்தி மிகவும் ஆச்சரியம் அளிப்பதாக அமைந்துள்ளது.

அவர்கள் வடக்கிற்கு செலுத்தியுள்ள விமானங்களை எண்ணிக்கையால் அளவிட முடியாது. அதுமட்டுமன்றி விமானப்டையினர் பெரும் எண்ணிக்கையான முக்கியஸ்தர்களையும் வடக்கிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

உண்மை ஆராயப்படாமல் பொறுப்பில்லாத வகையில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது." என்றார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு விசேட குழுவொன்றை நியமித்திருப்பதாக சிவில் விமான அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி நிமல்சிறி தெரிவித்தார்.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது பொறுப்பில்லாத செயன்முறை மட்டுமன்றி சட்டவிரோதச் செயன்முறையும் ஆகும்.

முக்கியஸ்தர்கள் மட்டுமன்றி எந்தவொரு தனிநபரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் விமானியால் செயற்பட முடியாது. செல்ல வேண்டிய பாதை தெரியாமல் விமானியால் ஒரு போதும் விமானத்தைச் செலுத்த முடியாது. இது ஏற்றகொள்ளக்கூடிய விடயமல்ல என்றும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த அமரவீர பயணித்த விமானம் ஒன்று பாரிய அனர்த்தத்திலிருந்து தப்பியுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் 14ம் திகதி இடம்பெற்றது.

தைப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் மஹிந்த அமரவீர தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் கொழும்பிலிருந்து பலாலி நோக்கிச் சென்ற தனியார் விமானமே இவ்வாறு பாரிய அனர்த்தத்திலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு அமைச்சர் மஹிந்த அமரவீரவும் அவரது மெய்பாதுகாவலர்களும் நேற்று முனதிம் தனியார் விமானம் ஒன்றில் கொழும்பிலிருந்து பலாலி நோக்கிச் சென்றுள்ளனர்.

மேற்படி விமானம் சுமார் 45 நிமிடங்களில் யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமான நிலையத்தை சென்றடையவிருந்த நிலையில் புறப்பட்டு 45 நிமிடங்கள் கழிந்த நிலையில் தலைமன்னரிலுள்ள தீவொன்றில் தரையிறக்க விமானி முற்பட்டுள்ளார்.

விமானி தவறான இடத்தில் தறையிறக்க போவதை அறிந்து கொண்ட விமானத்தில் பயணித்தவர்கள் ஏன் இங்கு தரையிறக்க போகின்றீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

தனக்கு விமானத்தை தரையிறக்க வேண்டிய பலாலி விமான நிலையத்தின் விமான வழிபாதை தெரியாது என்று அந்த தனியார் விமானத்தின் விமான ஓட்டி தெரிவித்துள்ளதுடன் பின்னர் இணையத்தை பயன்படுத்தி கூகுள் வழிகாட்டல் மூலம் பலாலி விமான நிலையத்தை சுமார் இரண்டு மணித்தியாலய பயணத்திற்கு பிறகு தரையிறக்கியுள்ளார்.

பலாலியில் விமானம் தரையிறக்கப்படும் போது விமானத்தின் பெற்றோல் தீர்ந்துள்ளமை தெரியவந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

எனினும் அமைச்சர் அடங்களான குழு எவ்வித ஆபத்துக்கள் இன்றி பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளதுடன் நிகழ்வில் பங்குபற்றியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு