யாழில் வைத்து ஜனாதிபதிக்கு சவால் விட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

ஆசிரியர் - Editor II
யாழில் வைத்து ஜனாதிபதிக்கு சவால் விட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

ஜனாதிபதியால் முடிந்தால் மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாகவும், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாகவும் நீதிமன்றில் வழக்கு தொடரட்டும் பார்க்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க சவால் விடுத்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தல் செயற்பாடுகளுக்காக யாழ். வந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் பிணைமுறி விவகாரம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கூறுகையில், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்திருந்தார். அந்த குழுவின் அறிக்கை வெளியான பின்னர் பிணைமுறி மோசடி தொடர்பாக என்ன தீர்ப்பு வழங்கப்படவுள்ளது? என மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

ஜே.வி.பி நாடாளுமன்றில் இருந்ததால் இந்த மோசடியை கண்டுபிடிக்க முடிந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியின் மீது குற்றச்சாட்டை சுமத்தி தனக்குரிய பொறுப்பை தட்டிக்கழிக்கப் பார்கின்றார்.

2015ஆம் ஆண்டு மாசி மாதம் 1500 கோடி ரூபாய் பிணைமுறி மோசடி நடைபெற்றிருந்தது. இது தெரிந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2ஆவது தடவையாக ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கினார்.

2ஆவது தடவையாக ரவி கருணாநாயக்கவை நிதி அமைச்சராக்கினார். இதனையும் ஜே.வி.பி கோப் குழுவில் இருந்தமையினால் கண்டுபிடித்தது.

மோசடி நடைபெற்று 2 வருடங்கள் கடந்த பின்னரே அது தொடர்பான தகவல்கள் மக்களுக்கு வெளிப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி வாள் வீச்சு தொடர்பாக பேசுகிறார்.

ஜனாதிபதியால் முடிந்தால் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாகவும், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாகவும் நீதிமன்றில் வழக்கு தொடரட்டும் பார்க்கலாம்.

பிணைமுறி மோசடி என்பதை சாதாரண மக்களால் இலகுவாக உணர்ந்து கொள்ள இயலாது. ஆனால் மோசடி செய்யப்பட்ட 1500 கோடி ரூபாவை வைத்து இந்த நாட்டில் சமுர்த்தி நிவாரணம் பெறும் மக்களுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான நிவாரணத்தை வழங்கலாம்.

இந்த நாட்டில் சாதாரண மக்கள் இப்போதும் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு வட்டி செலுத்துகிறார்கள். வங்கிகளில் வைத்த அடகு நகைகளுக்கும், பொருட்களுக்கும் வட்டி செலுத்துகிறார்கள். இவ்வாறான நிலையில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் மோசடிகளை செய்கிறார்கள்.

எனவே நாங்கள் சவால் விடுகிறோம். முடிந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாகவும், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாகவும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு முன்னர் நீதிமன்றில் வழக்கு தொடரட்டும் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு