நாடாளுமன்றம் பொய்யானதா? யாழில் கேள்வி

ஆசிரியர் - Editor II
நாடாளுமன்றம் பொய்யானதா? யாழில் கேள்வி

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களை மக்கள் மத்தியில் அமுல்படுத்தாவிடின், அந் நாடாளுமன்றம் பொய்யானதா என கடற்றொழிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

யாழ்.மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தில் இன்று (15)இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வடமராட்சி மற்றும் நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

வடமாகாணத்தில் 40 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சம் கடற்றொழிலாளர்கள் வாழ்கின்றார்கள். சிறு எண்ணிக்கையினைக் கொண்ட இழுவைப்படகு தொழிலாளர்களினால், மிகப்பெரிய பாதிப்பினை எதிர்கொண்டு வருகின்றோம். எமது அடுத்த சந்ததியினருக்கு எதைக்கொடுக்கப் போகின்றோம் என்று தெரியவில்லை.

அரசாங்கம் கடந்த ஆண்டு இழுவைப்படகு சட்டத்தினை நிறைவேற்றியிருந்தும், தற்போதும் இழுவைப்படகு தொழில் செய்யப்பட்டு வருகின்றமையினால், இழுவைப்படகு தொழில் சட்டரீதியாக நிறுத்தப்பட்டுள்ளதா? இல்லையா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் உள்ளது.

இழுவைப்படகு தொழிலை மீண்டும் செய்பவர்கள் தொடர்பில் கடற்தொழில் அமைச்சு கவனம் செலுத்தாமையினால், கடல்சார்ந்து வாழும் மக்கள் மிகப்பெரிய பாதிப்பினை எதிர்க்கொண்டு வருகின்றார்கள்.

இழுவைப் படகு தொழில் தடை செய்யப்பட்டுள்ளதா, தொழில் செய்யலாமா, செய்யக் கூடாதா என்று தெளிவுபடுத்த வேண்டும்.

நாடாளுமன்றத்தினால் தடை செய்யப்பட்டு வர்த்தகமானியின் ஊடாக அறிவிக்கப்பட்ட இழுவைமடித் தொழிலை இதுவரையில் நிறுத்தப்படவில்லை.

யாழ்.மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக கடல்வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் சுரண்டப்பட்டு, அன்றாடம் வாழ முடியாத சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இழுவைபடகு, டைனமேட் மற்றும் குழை தள்ளுதல் இவ்வாறான மீன்பிடி முறைமையினால், மிகவும் பாதிப்படைவதுடன், சர்வாதிகாரமான முறையில் அட்டை பிடிக்கும் தொழில் செய்கின்றார்கள்.

நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தின் ஊடாக கூட இழுவைப்படகு தொழில் சட்ட ரீதியாக நிறுத்தப்படவில்லை. நாடாளுமன்றம் பொய்யானதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களை மக்கள் மத்தியில் அமுல்படுத்த முடியாவிடின், ஏன் நாடாளுமன்றத்தில் சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும் மீண்டும் கேள்வி எழுப்பினார்கள்.

நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தினை ஒரு சில அரசியல்வாதிகளுக்காக நடைமுறைப்படுத்தாமல் வைத்திருக்கின்றார்களா என்றும் ஒட்டுமொத்தமாக என்ன நடவடிக்கைக்காக இவ்வாறு நடைமுறைப்படுத்தாமல் வைத்திருக்கின்றார்கள் என்றும் புரியவில்லை.

சட்டவிரோத இழுவைப்படகு தொழிலை மேற்கொள்பவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கொண்டு, பாதிக்கப்படும் மீனவர்களின் வாழ்வதாரத்திற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று வேண்கோள்விடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு