பஞ்சாயத்தில் முடிவுறவுள்ள தமிழர் அரசியல்! -

ஆசிரியர் - Editor II
பஞ்சாயத்தில் முடிவுறவுள்ள தமிழர் அரசியல்! -

இலங்கைதீவில் தேர்தல்! உள்ளுராட்சி மன்ற தேர்தலிற்கான பிரச்சார மேடைகள் முழங்குகின்றன.

தெற்கில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் கட்சியினர் கூறுகிறார்கள் - போரை வென்றோம், பயங்கரவாதத்தை ஒழித்தோம்!

நல்லாட்சி என கூறப்படும் அரசின் கட்சியினர் கூறுகின்றனர் - குடும்ப ஆட்சியை ஒழித்தோம், ஊழலை ஒழித்தோம், நல்லாட்சியை ஏற்படுத்தினோம்.

முஸ்லீம் அரசியல் கட்சியினர் கூறுகின்றனர் - எமது பிரதேசங்களில் மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றினோம். எமது மக்களிற்காக இரவு பகலாக உழைக்கிறோம்.

மலையக அரசியல் கட்சிகள் கூறுகின்றன, எமது மக்களின் ஏழ்மை நிலைகளை ஒழிக்கிறோம், வாழ்விடங்களை புதுப்பிக்கின்றோம் இன்னும் பல செய்வோம்.

ஆனால், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒரு பகுதியினர் கூறுகின்றனர் - இடைக்கால தீர்வு தமிழர்களது வாழ்வை ஒளிமயமாக்க போகின்றதென,

இன்னுமொரு பகுதி கூறுகின்றது இடைக்கால தீர்வு என்பது தமிழர்களின் இருப்புக்கு வைக்கப்படும் இன்னுமொரு ஆப்பு என!

இன்னுமொருவர் கூறுகிறர், உள்ளுர் ஆட்சி மன்றங்கள் நுளம்பை கட்டுப்படுத்துவதும், வீதியை சுத்தம் செய்வது பற்றியதென.

இங்கு தான் தமிழ் அரசியல்வாதிகளின் மக்கள் பற்றிய பார்வையின் சந்தர்ப்பவாதம் மக்களிற்கு தெளிவாகிறது.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலையை மிக நுணுக்கமாக ஆராயுமொருவருக்கு, கடந்த எழுபது வருடங்களாக தமிழ் மக்களிற்கு, ஓர் நிரந்தர அரசியல் தீர்வு இன்று வரை கிடையாதது பற்றி எந்த புதுமையும் இருக்க முடியாது.

காரணம் சிங்கள தலைமைகள் கடந்த எழுபது வருடங்களாக, தமிழர்களை ஏமாற்றினார்கள் என்பதற்கு மேலாக, கடந்த எழுபது வருடங்களாக, தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக ஐக்கியமாக ஒர் அரசியல் தீர்வை முன் வைக்க தவறியது மட்டுமல்லாது, அவர்களது கொள்கையில் பல நெளிவு சுழிவுகள் இருந்தது என்பதே உண்மை.

தமிழ் தலைமைகளின் பலவீனத்தை சிங்கள தலைமைகள் நன்றாக தெரிந்துள்ள காரணத்தினாலேயே, தொடர்ந்து எம்மில் சவாரி செய்கிறார்கள்.

இவ் ஒற்றுமையை, தமது சுயநலங்களின் அடிப்படையில் குழப்பிய பெருமை, திரு சம்பந்தன் கூட்டத்தையே பெருமளவு சாரும் என மக்கள் கருதும் நிலை ஒன்றும் வடகிழக்கு வாக்காளர்களிடையே காணப்படுகிறது.

சரித்திரங்களை அவதானமாக ஆராயும் வேளையில், பாரளுமன்ற அரசியலிற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த வடக்கு கிழக்கு அரசியல், காலப் போக்கில் மாகாண சபை மட்டத்திற்கு சுருக்கமடைந்து, இன்று பிரதேச சபையில் முக்கியம் பெற்றுள்ளது. காலப்போக்கில் ‘பஞ்சாயத்தில்’ முடியவுள்ளது.

முன்னைய காலகட்டங்களில் - மாநகர சபை, நகரசபை, கிராம சபை போன்ற தேர்தல்களில் ஒரு பொழுதும் வடக்கு கிழக்கின் அரசியல் கட்சிகளின் அடிப்படையில் போட்டியாளர்கள் நிறுத்தப்பட்டது கிடையாது.

இதற்கான முக்கிய காரணம், இங்கு தேர்தல்கள் தொகுதி அல்லாது சில நூறு வாக்காளர்களை கொண்ட ‘வட்டாரங்களே’ காணப்படுகின்றன.

அவ்வட்டாரங்களில், தேர்தல்களில் போட்டியிடுபவர்கள், தமது வட்டாரத்தில் உறவினர்கள், அயலவர்கள், நண்பர்களின் வாக்குகளை நம்பியே போட்டியிட முன்வருவதுடன், போட்டியாளர் வட்டாரத்தில் பிரபல்யமானவரானால் வெற்றியும் அடைவார்.

சுருக்கமாக கூறுவதனால், அன்றும் இன்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தலின் முடிவுகளை அடிப்படையாக வைத்து, அரசியல் செல்வாக்கை கணிப்பது முடியாத காரியம்.

சுருக்கமாக கூறுவதனால், கடந்த நாற்பத்தி இரண்டு வருடங்களிற்கு மேலாக வெளிநாட்டு வாழ்க்கையை கொண்டுள்ள என்னால், எனது பிறந்து வளர்ந்து ஊருக்கு சென்று, உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவேனேயானால், இன்றும் என்னால் எமது வட்டாரத்தில் எந்த வேட்பாளரையும் நிச்சயம் தோற்கடிக்க முடியும்.

அங்கு எனது அரசியலிற்கோ கொள்கைகோ எனது உறவினர், அயலவர், நண்பர்கள் முக்கியத்துவம் காட்டாது, எனது முகத்திற்கே வாக்களிப்பார்கள்.

ஆவா குழு

உதாரணத்திற்கு, இவ் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கையை நாளாந்தம் சிதைத்த வாள் வெட்டு குழுவான, ‘ஆவா குழு’விற்காக நீதிமன்றத்தில் வாதாடிய சிலர் போட்டியிடுகின்றனர்.

தற்செயலாக இவ் நபர்கள், தேர்தலில் வெற்றி பெற்றால், அவ் வட்டார மக்கள், ‘ஆவா குழு’விற்கு வழக்காடியதற்காக இவ் நபர்களிற்கு வாக்களித்தார்களென யாரும் கூற முடியுமா?. இங்கு தான் உள்ளுராட்சி மன்ற தேர்தல் அரசியலிருந்து மாறுபடுகிறது.

கடந்த சில நாட்களாக ஊடகங்களை அவதானித்த வேளையில், சில விடயங்களை மக்களிற்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன்.

கடந்த எழுபது வருடங்களாக வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு ஒர் நிரந்தர அரசியல் தீர்வை கொடுக்க முன்வராத சிங்கள பௌத்த அரசுகள், தமிழர்களது தாயக பூமியென கூறப்படும் வடக்கு கிழக்கை, இன்று வடக்காக சுருக்கி, அதிலும் யாழ்ப்பாணமாக மட்டும் அரசினால் கணிக்கப்படுகிற இவ்வேளையில், தற்போதைய பௌத்த சிங்கள அரசு, தமிழ் மக்களை திருப்திப்படுத்த கூடிய ஓர் அரசியல் தீர்வை முன் வைப்பார்கள் என்பது பகற் கனவு.

இதற்கு பல காரணங்கள் உண்டு. முதலாவதாக புதிய அரசியல் யாப்பை உருவாக்கி வருகின்ற அரசிற்கு, பாரளுமன்றத்தில் ஒழுங்கான நிலையான மூன்றில் இரண்டு வாக்கு பலம் கிடையாது.

இரண்டாவதாக, தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியை சார்ந்த ஜனதிபதி சிறிசேன உட்பட சகலரும், முன்னைய மூன்றில் இரண்டு வாக்கு பலத்தை கொண்ட ராஜபக்ச அரசில் அங்கத்துவம் வகித்தவர்கள். அன்று தமிழர்களிற்காக ஒன்றையும் செய்ய முன்வராதவர்கள் அல்லது ஊக்கப்படுத்தாதவர்கள், தற்பொழுது புதிதாக ஒன்றை செய்வார்களென கனவு காண்பது எமது வழமையான பலவீனம்.

மூன்றாவதாக, இவ் புதிய அரசியல் யாப்பிற்கு தெற்கில் வாழும் பௌத்த சிங்கள மக்களிடையே பாரிய ஆதரவு கிடையாது.

நான்காவதாக, தற்போதைய எதிர்க்கட்சியின் பலத்திற்கு மேலாக, கூட்டு எதிர்க்கட்சியின் பலம் காணப்படுகிறது. இவ் கூட்டு எதிர்க்கட்சிக்கு, பௌத்த பீடாதிபதிகளின் ஆதரவுள்ளது.

இறுதியாக, சரித்திரங்களை ஆராயும் வேளையில், இலங்கைத்தீவில், பௌத்த பீடாதிபதிகள் ஏற்றுக் கொள்ளாத அரசியல் தீர்வை, எந்த சிங்கள ஆட்சியாளர்களும் நடைமுறைப் படுத்தியது கிடையாது, நடைமுறைப் படுத்த போவதுமில்லை.

ஆகையால் இடைக்கால தீர்விற்குள் பூதம் இருக்கிறதா அல்லது, இதனால் தமிழர்களது வாழ்வு ஒளிமயமாக போகின்றதா என்பதை விவாதிப்பதற்கு முன்பு, தற்போதைய அரசினால் முன் வைக்கும் புதிய அரசியல் யாப்பை, அரசினால் எப்படியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என்பதை ஆராய்ந்து, சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவதே புத்திசாலித்தனமான செயல்.

தற்போதைய அரசு, தமிழர்களை மட்டுமல்லாது சர்வதேசத்தையும் ஏமாற்றுகிறார்கள் என்பதே உண்மை. இதனது விளைவு என்னவெனில், திட்டமிட்டு கால நேரங்களை கடத்தும் இவ்வேளையில், அரசினது நான்கு திட்டங்களான – பௌத்த மயம், குடியேற்றம், இராணுவ மயம், சிங்கள மயம் போன்றவை வெற்றிகரமாக நிறைவேறுகின்றன என்பதை தமிழ் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னைய அரசிற்கு தெளிவான மூன்றில் இரண்டு வாக்கு பலம் பாரளுமன்றத்தில் இருந்தும் செய்ய முன்வராத விடயத்தை, வாக்கு பலம் அற்ற அரசு செய்யவுள்ளதாக சர்வதேசத்திற்கு காட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாதவொன்று.

இதேவேளை, நடைபெற்ற உரையாடல்களில் ஐ.நா.மனித உரிமை சபை பற்றி இடம்பெற்ற ‘மழுவல்’ வார்த்தைகள் பற்றி, வாசகர்களுக்கு ஓர் தெளிவை கொடுப்பதும் மிகவும் அவசியம்.

2006ம் ஆண்டு மனித உரிமை சபை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, இப்படியாக ஒரு வழி முறை ஐ.நா.வில் இருக்கவில்லையென கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.

காரணம், 1946ம் ஆண்டு ஐ.நா.வினால் ஆரம்பிக்கப்பட்ட 53 அங்கத்துவ நாடுகளை கொண்ட மனித உரிமை ஆணை குழுவின் தொடர்ச்சியே, மனித உரிமை சபை. முன்னைய மனித உரிமை ஆணை குழு, ஐ.நா.வின் சமூக பொருளாதார சபையுடன் இயங்கியது. தற்போதைய மனித உரிமை சபை, ஐ.நா. பொது சபையுடன் இணைந்து இயங்குகிறது.

மனித உரிமை ஆணை குழுவும் ,மனித உரிமை சபை போன்று, பல நாடுகள் மீது பலவிதப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தது. அடுத்து ஓர் அரசியல் கட்சி, ஐ.நா.மனித உரிமை சபையில் அரச சார்பற்ற நிறுவனத்தினுடாக பங்கு கொள்வது பற்றி கூறப்பட்ட விடயமும் ஏற்று கொள்ள முடியாதாது.

காரணம், மிக அண்மை காலமாக பல தமிழ் அரசியல்வாதிகள், ஐ.நா. மனித உரிமை சபையில், தமது அரசியல் கட்சியினூடாக அல்லது அரச சார்பற்ற நிறுவனத்தினூடாகவே கலந்து கொண்டனர் என்பதை இங்கு நினைவு கூர விரும்புகிறேன். ஆகையால், ‘மனம் உண்டானால், இடமுண்டு’ என்பதே உண்மை.

ஐ.நா.தீர்மானமும் தமிழரும்

இதேவேளை – 2015ம் ஆண்டு ஐ.நா.மனித உரிமை சபையினால் சிறிலங்கா மீது கொண்டு வரப்பட்ட தீர்மானம் நீத்து போனதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, ஐ.நா.விற்கு வருகை தந்த சில தமிழ் அரசியல்வாதிகளும், விளைவுகளை புரிந்தும் புரியாத உணர்ச்சிவசம் கொண்ட சில தமிழர்கள், சிறிலங்கா மீதான தீர்மானம் கருத்து பரிமாறுதலில் இருந்த வேளையிலேயே, நன்றாக திட்டமிட்டு, ஐ.நா.மனித உரிமை சபையிலேயே நாசகார பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதனால் தீர்மானத்தை கொண்டு வந்த நாடுகள், தீர்மானத்திலிருந்து பின்வாங்க தொடங்கின என்பதே உண்மை.

தீர்மானத்தில் ‘தமிழர்’ பற்றி ஒரு வார்த்தையோ சொல்லு இல்லையென கூறும் தமிழ் அரசியல்வாதிகளிற்காக நாம் அனுதாபப்படுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. காரணம், இவர்களிற்கு ஐ.நா. தீர்மானங்களை ஒழுங்காக வாசித்து தெரிந்து கொள்ளும் தன்மை கிடையாது.

யதார்த்தமாக நாம் விடயங்களை கவனத்தில் கொண்டால், தீர்மானத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களில் ‘தமிழ் - தமிழர்’ என்ற சொற்பதங்கள் தாராளமாக உள்ளதை காண முடியும். தீர்மானம் பற்றி குறை கூறுபவர்கள, மற்றைய நாடுகள் மீதான தீர்மானங்களை என்றும் பார்க்கவில்லை போலும்.

உண்மையை கூறுவதானால், சில தமிழ் அரசியல்வாதிகளின் விதண்டாவாதங்களிற்காக, ஐக்கிய நாடுகள் சபை, 194 அங்கத்துவ நாடுகளிற்கான தமது பொது நிலைப்பாட்டின் நடைமுறைகளை, மாற்றி அமைக்க வேண்டுமென எண்ணுவது மிகவும் மிலேச்சத் தனமான சிந்தனை.

ஐ.நா. நடைமுறைகளிற்கு அமைய, தமது வரையறைக்குள், அங்கத்துவ நாடுகளின் செயற்பாடுகளை பாராட்டுவது ஐ.நா.வின் நடைமுறை. இதை அறியாதவர்கள், ஐ.நா. சிறிலங்காவை பாராட்டியதை ஓர் மாபெரும் விடயமாக கொள்வது மிகவும் அபத்தமான விடயம்.

இங்கு தாங்களும் குழம்பி மக்களையும் குழப்பி, வாலில் நெருப்பை கட்டி ஊரையே அழிக்கும் அனுமனின் படலம் ஆரம்பமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அல்லது மனித உரிமை சபை என்பது, சிறிலங்காவிற்காகவோ அல்லது தமிழர்களுக்காகவோ மட்டும் செயற்படும் நிறுவனம் அல்ல.

அடுத்து, மக்களிற்கு ‘சர்வதேச அரசியல்’ விளங்கவில்லை தெரியவில்லையென கூறுவதற்கு நாங்கள் யார்? அப்படியானால், சர்வதேச அரசியல் விளங்கிய நாம் என்ன செய்கிறோம்?

இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா உட்பட ஒட்டு மொத்தமாக சர்வதேசத்தை எதிர்ப்பது, குழப்புவதன் மூலம், தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு உலை வைக்கப்படுவதை இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா?

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு