SuperTopAds

நீராவியடி பிள்ளையாரை கண்காணிக்க சிசிரிவி பொருத்திய பிக்கு! - அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் - Admin
நீராவியடி பிள்ளையாரை கண்காணிக்க சிசிரிவி பொருத்திய பிக்கு! - அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில், அத்துமீறி விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவினால், பிள்ளையார் ஆலயத்தில் பொருத்தப்பட்டுள்ள இரகசிய சிசிரிவி கெமராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றின் அனுமதிகளுடன் பொதுமக்கள் நேற்று பிள்ளையார் ஆலயத்தின் இரு மருங்கிலும் வீதி ஓரம் பெயர் பலகையை நாட்டச் சென்றனர். இதன்போது நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரும் செம்மலைக் கிராம மக்களும் பௌத்த பிக்கு மற்றும் விகாரைக்கு பாதுகாப்பாக நிற்கும் பொலிஸ் உத்தியோகத்தரால் தடுக்கப்பட்டனர்.

பௌத்த பிக்குவின் முறைப்பாட்டுக்கு அமைவாக உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார் ஆலயத்துக்கு அபிவிருத்தி வேலைகளுக்காகவும் வழிபாட்டுக்காகவும் சென்ற மக்களை நிலத்தில் அமர்த்தி விசாரணைகளை செய்து பதிவுகளை மேற்கொண்டு குற்றவாளிகளை போல நடத்தியிருந்தனர்.இந்த சம்பவங்களையடுத்து குறித்த நீராவியடி பிள்ளையார் ஆலயத்தினை சேர்ந்தவர்களால் நகர்த்தல் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இன்றையதினம்முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .

மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையில் சிரேஷ்ட சட்டதரணி அன்டன் புனிதநாயகம் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினை சேர்ந்த சட்டத்தரணிகளும் ஆஜராகியிருந்தனர் .

நேற்று வழிபாடுகளுக்கும் அபிவிருத்தி வேலைகளுக்கும் சென்ற நீராவியடி பிள்ளையார் ஆலயத்தினருக்கு பொலிஸாரினாலும் பௌத்த பிக்கு தரப்பினராலும் இடையூறு ஏற்பட்டமை தொடர்பில் வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தியை ஆதாரம் காட்டி சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார் .

இதனையடுத்து உடனடியாக முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மன்றுக்கு அழைத்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பின் படி பௌத்த பிக்குவால் மாற்றம் செய்யப்பட்ட கணதேவி தேவாலயம் என்ற பெயரை ஏற்கனவே இருந்ததை போன்று நீராவியடி பிள்ளையார் ஆலயம் என மாற்றம் செய்யுமாறு பொலிஸாருக்கு கூறப்பட்டது.

இன்னும் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் இரண்டு புதிய இரகசிய கெமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் வினவினார்.இதன்போது இன்றையதினமே இரகசிய கெமராக்களை அகற்றுவதாகவும், பெயரினை மாற்றுவதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி மன்றில் தெரிவித்ததை தொடர்ந்து உடன் குறித்த வேலைகளை செய்யுமாறும் மேலும் இரண்டு தரப்பினரையும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நீதிமன்றின் தீர்ப்பை மதித்து செயற்படுமாறும் அமைதிக்கு பங்கம் ஏற்படாதவாறு செயற்படுமாறும் கட்டளையிட்டது.