ரிசாட், ஹிஸ்புல்லா விலகாவிடின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு! - ரெலோ முடிவு
அமைச்சர் ரிசாட் பதியுதீன், கிழக்கு ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் உடனடியாக பதவி விலகி நீதியான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ரெலோ தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அவ்வாறு, அவர்கள் விலக மறுத்தால், அவரை அரசாங்கம் பதவிவிலக்க வேண்டும் என்றும், அதையும் மீறி ரிசாட் பதியுதீன் விடாப்பிடியாக பதவியில் இருப்பாரானால் அவருக்கெதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவிலுள்ள ரெலோ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற கட்சியின் தலைமைக்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டு கட்சியின் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
ஐ.எஸ். அமைப்பின் பின்னணியில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அரசியல்வாதிகளின் பின்னணியுடையவர்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளறிலையில் சந்தேகநபர்களை விடுவிக்க முயற்சித்ததாக இராணுவத் தளபதியும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரிசாட் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது பதவிகளை துறந்து நீதி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.
இந்நிலையில், ரிஷாட் பதியுதீன் மறுக்கும் பட்சத்தில் ரெலோவின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பதென முடிவெடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், ரெலோ தலைமைக்குழு உறுப்பினர்கள் 24 பேரில், பதினொரு பேரட கலந்து கொண்டனர். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலம், என்.ஸ்ரீகாந்தா, வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.