​டான் செய்திஆசிரியர் தயாமாஸ்ரரை தாக்கிய முதியவர் விளக்கமறியலில்

ஆசிரியர் - Admin
​டான் செய்திஆசிரியர் தயாமாஸ்ரரை தாக்கிய முதியவர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு கலையகத்துக்குள் கத்தி, பொல்லுடன் அத்துமீறி நுழைந்து அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளர் தயா மாஸ்டரைத் தாக்கிய வயோதிபரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள டான் தொலைக்காட்சி ஒளிபரப்புக் கலையகத்துக்கு நேற்றுமாலை வயோதிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அவரது கைகளில் வெட்டுக்கத்தி மற்றும் பொல்லு என்பன இருந்தன.

கலையகத்தின் வரவேற்பு அறைக்குள் நுழைந்த அவர் அங்கு பணியிலிருந்த செய்திப் பணிப்பாளர் தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வே.தயாநிதியை அந்த முதியவர் தாக்கினார்.

தயா மாஸ்டரை அவர் கத்தியால் வெட்ட முற்பட்ட போது சக பணியாளர்கள் அவரைக் காப்பாற்றினர். அடாவடியில் ஈடுபட்ட முதியவரைத் துரத்திப் பிடித்த டான் நிறுவனப் பணியாளர்கள், அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

முதியவரிடம் நேற்றுமாலை தொடக்கம் இன்று மாலைவரை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்க்கொண்டனர்.

"முதியவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்றே வாக்குமூலம் வழங்கினார். தனது மூளைக்குள் இரும்புத் தகட்டைச் சொருகி டான் நிறுவனத்தினர் தன்னிடமுள்ளவற்றை பெறுகின்றனர்.

என்னிடம் கைபேசியில்லை, எனது மூளைக்குள் மெமரிக்காட் உள்ளது. அது தேவையான போது கைபேசியாகப்பயன்படுத்துவேன்" என்று மனநிலை பாதிக்கப்பட்டவராக அவர் விசாரணையின் போது நடந்துகொண்டார்.

20 வருடங்களுக்கு மேலாக அவர் ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பியுள்ளார். முதியவர் தற்போது யாழ்.பிரதான வீதியுள்ள அந்தியகால சேவை நிறுவனத்தில் பணியாற்றுகிறார்" என்று பொலிஸார் கூறினர்.

முதியவரை யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் இன்று முன்னிரவு பொலிஸார் முற்படுத்தினர். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று நடந்துகொள்கிறார் என நீதிவானிடம் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

"முதியவரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும். வழக்கு விசாரணை வரும் 16ஆம் திகதி செவ்வாய்கிழமை நீதிமன்றில் இடம்பெறும். அன்றைய தினம்வரை சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்படுகிறார்" என்று யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு