இந்திய, இலங்கை இராணுவங்கள் உருவாக்கிய மண்டைதீவு மனித புதைகுழி தோண்டப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் சாட்சியம்..
யாழ்.மண்டைதீவு பகுதியில் இருப்பதாக கருதப்படும் மனித புதைகுழியை தோண்டவேண்டும். என கேட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் நேற்றய தினம் மேற்படி மனித புதைகுழி தொடா்பாக காணாமல்போனவா்கள் அலுவலகத்தில் சாட்சியம் வழங்கியுள்ளாா்.
நேற்று மாலை கொழும்பிலுள்ள காணாமல்போனோருக்கான அலுவலகத்தில் இந்த சாட்சியத்தை அவர் பதிவு செய்தார். காணாமல்போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் முன்னிலையில் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மண்டைதீவில் அமைந்துள்ள புனித தோமையார் தேவாலயத்துக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள காணியில் அமைந்துள்ள கிணறு, செம்பாட்டுத் தோட்டத்திலுள்ள கிணறு, கடற்படை முகாமுக்குள் உள்ள கிணறு ஆகியவற்றில் மனித எலும்புக்கூடுகள் உள்ளன என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.
1990ஆம் ஆண்டு ஊர்காவற்துறையில் இருந்து முன்னேறிய இராணுவத்தினர், அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகள் உள்ளிட்ட இடைப்பட்ட பகுதி இளைஞர்களை மனிதக் கேடயமாக நகர்த்தி மண்டைதீவுக்கு வந்தனர் எனவும், அங்கு 119 இளைஞர்களைச் சுட்டுக் கொன்று, கிணறுகளில் போட்டு மூடினர் எனவும் அந்தக் கிராம மக்கள் குறிப்பிடுகின்றார்கள்.
2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கையின் பின்னர் வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் செயலகம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தலைவர், யாழ். பல்கலைகழக மாணவர்கள் மற்றும் சில மனித உரிமை அமைப்புகள் இணைந்து இந்தப் படுகொலை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, ஆவணமொன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கொல்லப்பட்ட 119 இளைஞர்களின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
விடுதலைப்புலிகளின் காலத்தில் வெளியிடப்பட்ட அந்த ஆவணமே, மண்டைதீவு படுகொலை குறித்த ஆய்வுரீதியான ஆவணமாகக் கருதப்படுகின்றது. அந்த ஆவணத்தையும் சி.சிறிதரன் எம்.பி. இன்று கையளித்தார்.
இது குறித்து தொடர்ந்து ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து சிறிதரன் எம்.பி. உரையாற்றியபோது, காணாமல்போனோர் அலுவலகத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் மனோ கணேசன் பதிலளித்திருந்தார். அந்தக் கிணறுகள் குறித்த தகவல்கள் மற்றும் வரைபடங்களைத் தந்தால் தோண்டிப் பார்க்கவும் தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.