பெளத்தமயமாக்கலை தட்டிக்கேட்ட ரவிகரனுக்கு விராசணை..
முல்லைத்தீவு - செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு கடந்த 14.01.2019 அன்று வழிபாடுகளுக்காக சென்ற தமிழ் மக்களை வழிபாடு செய்யக்கூடாதென, அப்பகுதியில் அத்து மீறிக் குடியிருக்கும் பௌத்த பிக்கு கூறியதையடுத்து இரு தரப்பினருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
அதனையடுத்து தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் போலீஸாரின் தலையீட்டுடன் தமிழ் மக்கள் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுசெய்ய அனுமதிக்கப்படனர்.
வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலய வழாகத்தில் ஆலய நிர்வாகத்தினரால் பிள்ளையார் ஆலயத்தின் கட்டட வேலைகளுக்கென அடிக்கல்லும் நாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விசாரணை செய்வதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை போலீஸ் நிலையம் வருமாறு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு முல்லைத்தீவு போலீஸார், 04.04.2019 திகதியிடப்பட்ட அழைப்புக் கட்டளை ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் கொழும்பு மேதாலங்கார கிமி நாயாறு பௌத்த விகாராதிபதியால் முறைப்பாடு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள குறித்த அழைப்புக் கட்டளையில்,
செம்மலை கிராம சேவகர் பிரிவில் நாயாறு குருகந்த விகாரையில் தொல்லியல் திணைக்களத்திற்குரிய இடத்தில் அத்திவாரம் வெட்டியமை தொடர்பாக என அவ் அழைப்புக் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அழைப்புக் கட்டளையில் குறித்த தங்களுக்கெதிரான முறைப்பாட்டை விசாரணை செய்வதற்காக 07.04.2019 திகதியன்று காலை 09.00மணிக்கு முல்லைத்தீவு பொலீஸ் நிலைய விசாரணைக் காரியாலயத்திற்கு வருகைதருமாறு அறியத்தருகின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 1979ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டத்தின் 109(6) பிரிவின்படி முறைப்பாட்டை விசாரணை செய்வதற்காக பொலீஸ் நிலையத்திற்கு அழைப்பதற்கான பத்திரம் எனவும்
விசாரணைக்கு வரத் தவறினால் சட்டக்கோவை 172ஆம் பிரிவின் கீழ் வழக்கு தொடர நேரிடும் என்றும் குறித்த அழைப்புக் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இவ் அழைப்புக் கட்டையை முல்லைத்தீவு போலீஸ்நிலைய பொறுப்பதிகாரி எச்.ஏ.எல்.பி.ஹெற்ரியாராச்சி அனுப்பி வைத்துள்ளார்.