காயங்களுடன் நீதிமன்றில் நிறுத்தப்பட்ட சந்தேகநபர், பொலிஸார் மீது சந்தேகமடைந்த நீதிபதி..
சந்தேகநபருக்கு காயங்கள் இருப்பின் அவரை நீதி மன்றத்தில் முற்படுத்தும் முன் சட்டவைத்திய அதி காரியிடம் முற்படுத்தி மருத்துவ சான்றிதழுடனே யே நீதிமன்றத்தில் முற்படுத்தவேண்டும்.
எனினும் சந்தேகநபரை காயங்களுடன் முற்படுத்திய பொலிஸார், மருத்துவச் சான்றிதழை மன்றுக்கு முன்வைக்காததது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது"
இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், கோப்பாய் பொலிஸாரைக் கண்டித்தார்.
ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபரை பொலிஸார் கடுமையாகத் தாக்கினார்கள்
என்ற குற்றச்சாட்டை அவரது சட்டத்தரணி மன்றில் முன்வைத்த போதே மேலதிக நீதிவான், பொலிஸாரை எச்சரித்ததுடன் மருத்துவச் சான்றிதழை முன்வைக்குமாறு அறிவுறுத்தினார்.
கொக்குவில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியில் பொலிஸாரின் ஒற்றருக்கு ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்ய முற்பட்டார் என கடந்த திங்கட்கிழமை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை நேற்றுவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மேனகா ஜீவதர்ஷன், "சந்தேகநபரை கோப்பாய் பொலிஸார் தடுப்பில் வைத்து கடுமையாகத் தாக்கனார்கள். அதனால் சந்தேகநபர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்" என்று மன்றுரைத்தார்.
"சந்தேகநபரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது, அவர் தப்பி ஓடினார். ரயில் நிலையத்தை அண்டிய குடியிருப்பு ஒன்றுக்குள் புகுந்த சந்தேகநபர் அங்கு விறகு போடப்பட்டிருந்த பகுதியில் தடக்கி வீழ்ந்தார். அதனால்தான் அவருக்கு காயம் ஏற்பட்டது" என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், "சந்தேகநபருக்கு காயங்கள் இருப்பின், அவரை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவச் சான்றிதழ் பெற்ற பின்னரே நீதிமன்றில் முற்படுத்த வேண்டும். ஆனால் இந்த வழக்கில் பொலிஸார் அதனைப் பின்பற்றவில்லை.
பொலிஸாரின் இந்த நடவடிக்கை மன்றை சந்தேகிக்க வைக்கின்றது. சந்தேகநபரை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவச் சான்றிதழ் பெறவேண்டும். அவரின் காயத்துக்கான காரணங்களை மன்றுக்கு அறியப்படுத்தவேண்டும்" என்று பொலிஸாரை கண்டித்து உத்தரவிட்டார்.
அத்துடன், சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.