SuperTopAds

மட்டக்களப்பு ஆயருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு - கால அவகாசத்துக்கு கடும் எதிர்ப்பு!

ஆசிரியர் - Admin
மட்டக்களப்பு ஆயருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு - கால அவகாசத்துக்கு கடும் எதிர்ப்பு!

வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையாவை இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார். ஆயர் இல்லத்திற்கு சென்ற வடமாகாண முன்னாள் முதலமைச்சருக்கும் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயருக்கும் இடையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கைக்கு ஜெனிவாவில் ​மேலும் காலஅவகாசம் வழங்கப்படுவதனால் எந்தவித நன்மையும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை, எமது பிரச்சினைகளை இழுத்து இழுத்து தூர்ந்துபோகச் செய்வதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.

ஒரு அரசியல் தீர்வு ஊடாக வடகிழக்கு இணைந்த அரசியல் தீர்வு ஒன்றினை தேர்தலுக்கு இணைவாக பெற்றுக்கொள்வதும் அவசியம். எனவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆயருடன் முன்னாள் முதலமைச்சர் கலந்துரையாடினார்.

தமிழ் தலைமைகளின் செயற்பாடுகள் காரணமாகவே இன்று தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் இதன்போது முன்னாள் வடமாகாண முதமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினையும் சி.வி.விக்னேஸ்வரன் நடத்தினார். இங்கு கருத்து தெரிவித்த அவர், “அரசியல் கட்சி ஒன்று தொடங்கவேண்டிய அவசியம் எமக்கு இருக்கவில்லை. மக்களுக்கு இருந்தது. மக்கள் வாக்களித்தவர்கள் அவர்களுக்கு உரியதை செய்யாமல் தமக்கு இஷ்டமானதை தான்தோன்றித்தனமாக தாங்கள் நினைப்பதுதான் சரி என்பதை அவர்கள் செய்துவந்தார்கள். இது எங்களது அடிப்படை கொள்கைகளை மறந்து செயற்படுவதாக எங்களுக்கு உணர முடிந்தது. அதன் காரணமாக எங்களுக்கு புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

எங்களது மக்கள் தங்களை தாங்களே பார்க்க கூடிய தேவை ஏற்பட்டு வருகின்றது. மத்திய அரசாங்கம் ஏதாவது தரும் வெளிநாடுகள் ஏதாவது தரும் என்று தொடர்ந்து நாங்கள் வாழமுடியாது. எங்களை நாங்களே நம்பி எங்களது வாழ்க்கையினை முன்கொண்டு செல்வது அவசியமாகின்றது. எங்களுக்கு அரசியல் தீர்வு இன்னும் தரப்படவில்லை.

பொருளாதார ரீதியாக நன்மைகள் தருவதாக கூறினாலும் தாங்கள் நினைத்ததையே எங்களுக்கு தருவார்களேயொழிய நாங்கள் கேட்பதை தரமாட்டார்கள். இந்த நிலையில் மக்களிடையே ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தி, எமது அடிப்படை விடயங்களை நாங்கள் தவறவிட்டால் எதிர்காலத்தில் எங்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டதன் காரணமாகவே புதிய கட்சியை உருவாக்கியிருக்கின்றோம்.

தமிழ் மக்களின் தலைமைகள் தமிழ் மக்களின் தேவைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் வந்ததன் விளைவே தமிழ் மக்கள் கிழக்கில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குவதற்கு காரணமாக அமைந்தது. இதனை சீர்படுத்துவது என்பது மிகவும் சிக்கலாகவும் கஷ்டமாகவும் இருக்கப்போகின்றது. கிழக்கில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் மற்றும் காணி அபகரிப்பு தொடர்பில் முன்னாள் காணி ஆணையாளர்கள், சட்டத்தரணிகளைக் கொண்டு குழுவொன்றினை அமைத்து புள்ளிவிபரங்களைப் பெற்றதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்தாலோசனை செய்யவுள்ளோம்.

ஜெனீவா தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் வழங்குவது என்பது நான்கு வருடத்தில் செய்யாததை இரண்டு வருடங்கள் மேலும் கொடுப்பதால் அது நடைமுறைப்படுத்தப்படாது என்பது எமது கருத்து.

எமது போர் வீரர்களுக்கு எதிராக எந்தவிதமான விசாரணைகளையும் முன்னெடுக்க அனுமதிக்கமாட்டோம் எனது எமது நாட்டு ஜனாதிபதியே கூறியிருக்கின்றார்.இவ்வாறான கருத்துகள் முன்வைக்கப்படும்போது மேலும் மேலும் கால அவகாசம் வழங்கப்படுவதனால் எந்தவித நன்மையும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை. எமது பிரச்சினைகளை இழுத்து இழுத்து தூர்ந்துபோகச் செய்வதற்கான நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு அந்நிய நாடுகளும் உதவும் வகையில் செயற்படுவதுடன் எமது கட்சிகளும் அவ்வாறு செய்வதால் தங்களுக்குரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து செயற்பட்டு வருகின்றனர். நாங்கள் அவற்றினை ஏற்றுக்கொள்வதாக இல்லை.

எங்களைப் பொறுத்த வரையில் ஐ.நா. செயலாளர் நாயகம் பாதுகாப்பு சபைக்கு உண்மையினை எடுத்துக்காட்டி இது தொடர்பில் நடவடிக்கைகளை எடுப்பதாக இருந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இதனை அனுப்பவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவுள்ளது எனவும் முன்னாள் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.