SuperTopAds

மாணவர்களை சமூகத்திற்கு தேவையானவர்களாக உருவாக்க வேண்டும்

ஆசிரியர் - Editor II
மாணவர்களை சமூகத்திற்கு தேவையானவர்களாக உருவாக்க வேண்டும்

வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்புவதற்கு எதிர்காலத்தில் உயர்பதவிகளில் அமரப்போகும் இன்றைய மாணவர்கள், கல்விக்கு மேலதிகமாக தங்கள் தலைமைத்துவப்பண்புகளையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் இந்தச் சமூகத்துக்கு தேவையானவர்களாக நீங்கள் மாறமுடியும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்துள்ளார். 

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 

அத்துடன் இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் வடக்கு கிழக்கு சிரேஷ்ட இணைப்பாளர் பா.பிரதீபனும் பங்கேற்றிருந்தார். 

பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் தனது உரையில், 

சமூகப் பாதுகாப்புச் சபைக்கு அங்கத்தவர்களை இணைத்துக் கொள்வதில் தேசிய ரீதியில் யாழ். மாவட்டமே முதலிடத்தில் இருந்து வருகின்றது. 

ஆரம்பத்தில் சமூக பாதுகாப்புச் சபையில் இணைவதன் பயன் தொடர்பில் பலர் அறிந்திருக்கவில்லை. ஓய்வூதியத்தை பெற்று அதன் அனுகூலங்கள் அனுபவிக்கத் தொடங்கிய பின்னர் அதிகளவில் இணைந்து கொண்டனர். 

முதுமைக்காலத்தில் ஓய்வூதியத்தின் அவசியம் உணரப்படும். இதனால்தான் என்னவோ அரசாங்க உத்தியோகத்தையே அதிகளவானோர் விரும்புகின்றனர். அவர்கள் இவ்வாறு அரசாங்க உத்தியோகத்தை விரும்புவதன் பின்னால் வேறு காரணமும் இருக்கின்றது. அரசாங்க வேலை கிடைத்தால் தாங்கள் 'சும்மா' இருந்து சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணமும் இருக்கின்றது. 

எந்தவொரு பிரதேசமும் அபிவிருத்தியடைய கல்வி அவசியம். கல்வியால்தான் ஒரு பிரதேசத்தை உயர்த்த முடியும். கல்வியில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொண்டால் மாத்திரம் போதாது. அவர்களின் நடத்தையில்தான் சமூகத்தில் மதிக்கப்படுவார்கள். அவர்கள் கல்வியால் உயரும் அதேநேரம், தலைமைத்துவப்பண்பையும், ஏனையோருக்கு உதவுவதையும், அன்பு செலுத்துவதையும், மற்றையோரை மதிப்பதையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். 

நீங்கள் எந்தப் பிரதியுபகாரத்தையும் எதிர்பார்க்காமல் மற்றையவர்களுக்கு உதவுவதில்தான் உண்மையான சந்தோசம் இருக்கின்றது. அவ்வாறு உதவுவதால் உங்களுக்கு பல உதவிகள் உங்களுக்குத் தெரியாமலேயே கிடைக்கும். இந்தப் பண்புகளை மாணவர்களாகிய நீங்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும், என்று ஆளுநர் கோரினார்.

இந்ந நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 138 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். 

4 மாணவர்களுக்கு தலா 50,000 ரூபாவும், 3 மாணவர்களுக்கு தலா 25,000 ரூபாவும், ஒரு மாணவனுக்கு 15,000 ரூபாவும், ஏனையோருக்கு 5,000 ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டன.